Feb 132013
 

நான் புலம்பெயரும் வரை, ஈழத்திலிருந்த இருபத்திரண்டு வருடங்களில் பெரும்பாலும் எனது முகவரியாக இருந்தது. அம்பிகை இல்லம் அளவெட்டி வடக்கு அளவெட்டி. அம்பிகை இல்லத்தில், சொந்தமாகப் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் பல பிள்ளைகளை சிறப்பாக சொந்தப்பிள்ளைகள் போல் வளர்த்துவிட்ட மாமா, மாமியிடம் (அப்பாவின் அக்கா) ஒரு பிள்ளையாகத்தான் நானும் அங்கு வளர்ந்தேன்.

மிச்சச்சொச்சம் www.saatharanan.com-034

மிச்சச்சொச்சம்

மாமாவின் அம்பிகை இல்லம் பிரமாண்டமானதொரு வீடு. தரையிலிருந்து ஐந்து படிகள் ஏறித்தான் வரவேற்பு விறாந்தைக்குள் வரவேண்டும். படிகளின் இரு ஒரங்களிலும் பெரும் திண்ணைகள். வரவேற்பு விறாந்தையின் இருமருங்கிலும் மாமாவின் அறை, ஆபிஸ் அறை. வரவேற்பறையைத் தாண்டினால் ஒரு பெரிய ஹோல். ஹோலின் ஒருமருங்கில் கூடம், படுக்கையறை, சாமியறை, மறுமருங்கில் வைப்பறை, நடைவழி, குசினி என‌ ஹோலின் பக்கத்திற்கு இரண்டென நான்கு அறைகளாய் மொத்தமாக‌ ஆறு பெரிய அறைகள் கொண்டதொரு பிரமாண்டமான வீடு. வீட்டை ஒரு சுற்று ஓடிவந்தால் களைத்துவிடுவோம். அவ்வளவு பெரிசு.

நல்ல மழை பெய்தால் முல்லைத்தீவிலிருந்து வரவழைத்த தனிப்பனைமரச் சிலாகைகளால் உருவாக்கிய மாபெரும் கூரையின் ஓடுகளிருந்து வழியும் நீர் அருவியாக அம்பிகை இல்லத்தின் திண்ணையின் முன்னால் கொட்டும். பால்ய காலத்தில் அதில் குளிப்பதில் உள்ள சுகம் இருக்கிறதே எழுத்தில் சொல்லிக் கொள்ளமுடியாதது.

அம்பிகை இல்லம் வெறுமனே ஒரு வசிப்பிடமாக மட்டும் இருந்ததில்லை. மாறாக‌ பாலர் பாடசாலை, தையல் பயிலுமிடம், ரியூசன் சென்ரர் என பல்வேறு விதங்களிலும் சமூகத்திற்கு உதவியிருக்கிறது. இதன் உச்சமாக அம்பிகை இல்லத்தின் ஹோலில் நாங்கள் காட்டிய பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் வீடியோ படக்காட்சி பற்றித் தனிப்பதிவுதான் போடவேண்டும்.

மாமா ஆங்கிலத்தில் புலமையுள்ள ஒய்வுபெற்ற தலமையாசிரியர், அதனால் அம்பிகை இல்லத்திற்கு தினசரி இரு பத்திரிகைகள் வரும், ஒன்று டெய்லி மிரர், மற்றது ஈழநாடு. இதைவிட தடிச்ச தமிழரசுக் கட்சி ஆதரவாளரான மாமாவுக்கு பிடித்த சுதந்திரனும் வாரவெளியீடாக வீடு வந்து சேரும். மாமாவிற்கு கண்பார்வை மங்கத் தொடங்கியிருந்ததால் பத்திரிகைகளை நான் வாசித்துக் காட்டுவதுண்டு. அப்ப‌டி அறியாது, தெரியாத வயதில் மாமாவுக்கு வாசித்த பத்தி, ‘ஐயாறன் எழுதுவது’ இல் உண்டான ஈர்ப்பு என்னை மரபில் ‘வானவில்’ எழுதவைத்தது.

இப்பதானே எல்லோரும் கொத்துபரோட்டா, சாண்ட்விச், மிக்சர், நொறுக்குத்தீனி, கள்ளத்தீனி என பத்தி எழுதுகிறார்களே, நானும் ஒண்டு எழுதினால் என்று நினைத்தபோது மாமியின் ருசியான பழம் சோத்துக் குழையல் தான் நினைவுக்கு வந்தது. எப்பிடியிருக்கிறது சாப்பிட நீங்கள் ரெடியென்றால் நானும் ரெடி. ஆனால் மச்சம் இல்லாத குழையல்தான்.

அன்புடன்
சாதாரணன்

  2 Responses to “மிச்சச்சொச்சம் – அம்பிகை இல்லம் அளவெட்டி வடக்கு அளவெட்டி”

  1. paravaai ella..nalla thaan kidakku.

  2. நன்றி சுதன்.

    அன்புடன்
    சாதாரணன்.

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)