Saturday, March 15, 2014

மலையாளத் திரைப்பட விமர்சனம் 'பிலிப்ஸ்உம் அந்தக் குரங்குப் பேனையும்' (Philips and the Monkey Pen)

நீண்ட நாளைக்குப் பின்னர் ஒரு மன‌துக்கு இதமான (feel good) சினிமா பார்த்த உணர்வை சற்று அதீதமாகவே இந்த மலையாளப் படம் தந்திருந்தது. முழுக்குடும்பத்தினரும் பார்த்து இரசிக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாகத் திறம்பட எடுத்திருக்கிறார்கள். மலையாளத் திரைப்படங்களில், யதார்த்தத்திற்கு மிக அருகில் காட்சிப்படுத்திவதினால் உங்களை திரைக்குள் உள்வாங்கும் மந்திரவித்தையை இலகுவாக நிகழ்த்திவிடுவார்கள்.

[caption id="attachment_634" align="aligncenter" width="575"]படத்தின் கதாநாயகர்கள் இவர்கள் தாம்!! www.saatharanan.com-049 படத்தின் கதாநாயகர்கள் இவர்கள் தாம்!![/caption]

இருந்தபோதிலும் இத்திரைப்படத்தில் 'இது உங்கள் அனைவரினதும் உண்மைக்கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்' (இது படத்தின் பன்ச் லைன்) என்று சொல்லி எங்கள் பால்யகாலத்திற்கு அழைத்துச் சென்று வெகுஇலகுவாக அந்த மந்திரவித்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் கதாநாயகர்கள் இந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் பட்டாளம்தான். கூடவே ஜெயசூர்யா, ரம்யா நம்பீசன், இன்னோசன்ற், விஜய்பாபு, மற்றும் முகேஷ் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
முழுநீளத் திரைப்படக் குறும்புகளுக்கு இந்த ஒரு ட்ரெய்லர் குறும்பு பதம்.

திரைப்படம் தற்கால சிறுவர்களின் நடைமுறைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப்பங்களெனக் காட்சிப்படுத்திய வண்ணம் பயணித்திருந்தாலும், படம் பார்க்கும் அனைவருக்கும் பொருந்தும் குறும்புகளோடு திரைக்கதையை அமைத்ததுதான் படத்தின் மிகச்சிறப்பு. இளம் இயக்குனர்களான றோயின் தோமஸ் (Rojin Thomas), சனில் முகமட் (Shanil Muhammed)உம் இணைந்து திரைக்கதை அமைத்து இயக்கி கலக்கியிருக்கிறார்கள். இது இவர்களின் முதற்திரைப்படம்.

படத்தில் இராகுல் சுப்பிரமணியத்தின் பின்னணி இசை பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். இவருக்கும் இது முதற்திரைப்படம். இசை அமைதியாக இருக்கவேண்டிய இடத்தில் அமைதியாகவும், தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தருணங்களில், துருத்திக்கொண்டு தெரியாமலும் வெளிப்பட்டிருக்கிறது. கடவுளின் சொந்த நாட்டின் அழகை நீல் டி குன்கா (Neil D' Cunha) வின் ஒளிப்பதிவு வெகுசிறப்பாகவே காட்டியுள்ளது. அதிலும் கதாநாயகர்களின், கதாநாயகன் குடியிருக்கும் வீடிருக்கும் சூழலின் அழகிருக்கிறதே அவ்வளவு அழகு. சான்ஸே இல்லை! அனுபவித்து பார்க்கலாம்.

படத்தில் கதையே இல்லையா? தனியக் குறும்புகள்தானா? என்று கேட்டுவிடாதீர்கள். நான் விமர்சனம் என்றபெயரில் காட்சிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக கூறுவதில் சிஞ்சிற்றேனும் உடன்பாடில்லாதவன். ஒன்று மட்டும் கூறலாம். பெற்றோருக்கும், பிள்ளைகளும் இடையே உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை நன்றாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். கதை தாராளமாக உண்டு. ஏமாற மாட்டீர்கள்.

திரைப்படத்தை நம்பிப் பார்க்கலாம். ஒரு முழுநீள நல்ல படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வை அடைவீர்கள், உங்களையும் அறியாமல் உங்கள் பால்யகாலத்திற்கு சென்றுவிடுவீர்கள், என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அன்புடன்
சாதாரணன்

பிற்குறிப்பு : படத்தின் பெயரை கேரள கலாச்சார வழக்கத்தின்படி சரியாக தமிழ்ப்படுத்தினால் ' பிலிப் குடும்பத்தினரும் அந்தக் குரங்குப்பேனையும்' என்றுதான் சொல்ல வேண்டும்.