Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

[caption id="" align="aligncenter" width="480"] புத்தாண்டு வாழ்த்துக்கள்[/caption]

அன்புடன்
சாதாரணன்

Wednesday, December 24, 2014

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!

எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!


Australian Christmas Greetings


 
அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்
சாதாரணன்

Tuesday, October 7, 2014

அனாதை - எனது முதற் சிறுகதை

அனாதை - இது எனது முதற் சிறுகதை. Australia வில் வெளிவந்து கொண்டிருந்த மரபு என்கின்ற தமிழ் சிற்றிதழில் எனது மற்றுமோர் புனைபெயரில் வெளியாகியது. நன்றி - மரபு Australia

அனாதை


அப்பாவின் உருவம் மெலிதாய் தெரிந்த நாட்களில் நாங்கள் நானுஓயாவில் இருந்தோம். எப்போதும் மழை வரப்போவது போலிருக்கும் வானம், பசுமை தெரியும் தேயிலைச் செடிகள், சுடுதண்ணிக் குளியல் இவைதான் இப்போதும் எனக்கு நானுஓயாவின் அடையாளங்கள். தேயிலைச் செடிகளுக்குள் ஒளிந்து விளையாடுவது எனக்குப் பிடித்திருந்தது. கண்ணுச்சாமி எனக்குத் தோழன்.

அனாதை - எனது முதற் சிறுகதை www.saatharanan.com-051

"கண்ணுச்சாமியுடன் விளையாடப் போகாதே" என்று அப்பா அதட்டுவார்.

அதட்டலின் காரணம் அப்போ எனக்குப் புரியாததால் "ஏன்?" என்றேன் நான்.

பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கையை உபயோகிப்பது அப்பாவின் வழக்கம். அம்மாவிடம் ஓடுவது என் வழக்கமாயிருந்தது.

"அட்டை கடிக்கும்" என்றாள் அம்மா.

இரத்தம் உறிஞ்சும் அட்டை நினைவில் வந்தது. பொய் சரியெனப்பட்டது இப்போது புரிகிறது. அப்பாவிடம் பயம். அம்மாவின் செல்லம். நான் கடைசிப்பெடியன்.

பள்ளி விடுமுறைகள் சந்தோசமாய்க் கழியும். ரயிலில் வந்திறங்கும் அண்ணைகளும், அக்காக்களும் பெட்டி முழுவதும் சந்தோசமாய் வந்திறங்குவார்கள். விதம் விதமாய்ச் சாப்பாடு, பலவிதமான ஊர்க்கதைகள் நானுஓயா தியேட்டரில் படங்கள் என நல்ல சந்தோசமாய்க் கழியும் நாட்கள், மீண்டும் நானுஓயா புகைவண்டி நிலையத்தில் கண்ணீர் திரையிட வழியனுப்பும் அம்மாவின் ஏக்கப் பெருமூச்சுடன் நிறைவுறும்.

"அப்பாவின் பள்ளிகூடத்தில் படிக்கலாம்தானே. ஏன் ரயிலேறி தூரப் போகிறார்கள்?" என்ற என் கேள்விக்குப் பதில் எல்லோருடைய சிரிப்புத்தான். நானும் ஒருநாள் ரயிலேற எல்லாம் புரிந்தது.

மலையகத்தில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டிய அப்பா தன் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் நல்ல பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு உதவிட சித்தப்பாக்களும், மாமாக்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.

பெரியக்கா வயதுக்குவர அம்மாவும் எங்களுடன் தங்கிவிட்டாள். விடுமுறைகளில் அப்பா ரயிலில் வந்து போனார். வந்து போனவர் இளைப்பாறி நிரந்தரமாய் எங்களுடன் தங்கினார்.

அப்பாவின் எதிர்பார்ப்புகளை சிரமேற்கொண்ட பெரியண்ணையும் பேராதனை நோக்கி தன் காலடியை எடுத்து வைத்தான். அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழியே என்று மற்றவர்களும் பேராதனை, கொழும்பு எனப் பிரிந்து போனார்கள். சின்னக்காவிற்கு மட்டும் குசினி நன்கு பிடித்தது. கோலங்கள் விதம் விதமாய் போடப் பழகினாள். இரசித்துப் பார்ப்பதற்கு வீட்டில் நான் இருந்தேன்.

வீட்டில் இல்லாத வேளைகளில் சினேகிதர்களுடன் ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய சினேகிதர்களை அப்பாவிற்குப் பிடிப்பதில்லை. எனக்கு அப்பாவின் புத்திமதிகள் பிடிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நானும் அப்பாவும் முரண்படத் தொடங்கினோம். எனக்கும் அப்பாவிற்குமென இருந்த ஒரே சைக்கிள் முரண்பாடுகளுக்கு எண்ணை வார்த்தது. எனக்கு 'ரியூசன்' இருந்த வேளைகளில் அது அப்பாவுடன் வாசிகசாலைகளிலும், அப்பாவிற்கு அவசர வேலைகள் இருந்தபோது அது என்னுடன் ஒழுங்கைகளில் ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தது. இரவுச் சாப்பாட்டின்போது காரண, காரியத் தொடர்புகள் ஆராயப்பட்டபோது அழுகைகள், ஆவேசப் பேச்சுக்கள், சபதங்கள் எனக்கிளம்பி அம்மாவின் மத்தியஸ்தத்தினால் சமநிலைக்கு வருவதுமாயிருந்தது. (உண்மையில் அது என்பக்கம் சார்பாயிருந்தது.)

எனக்கு அப்பாவைப் பிடித்த நேரங்களுமிருந்தன. அப்பா குடிப்பதில்லை என்ற பெயர் ஊரில் இருந்தது. கொஞ்சம் குடித்தாலே வெறித்துவிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஒற்றைப் பனைக் கள்ளு உடம்புக்கு தெம்பு என்ற சூத்திரம் அவருக்குப் பாதுகாப்பாயிருந்தது. ஏதாவதொரு சனியில் பகல் பத்து மணியளவில் குடிப்பார். இல்லை அருந்துவார். கொஞ்சமாய் கிக் ஏற உளறத் தொடங்குவார்.

"டேய் என்னுடைய அம்மா அப்பம் சுட்டு வித்து என்னைப் படிப்பித்தா, நீங்கள் என்னடாவெண்டால்...." என்று பழைய சரிதங்கள், ஏமாற்றங்கள், கதைகள் தொடர்ந்து வரும். இந்தவேளைகளில் எனக்கு அப்பாவைப் பிடித்திருந்தது. இரசிக்கவும் முடிந்தது.

பேராதனையும் அண்ணையை ஒரு Engineer ஆக உருவாக்கியது. மகாவலி Project அவருக்கு வேலை கொடுத்தது. நான்கு வருடங்கள் நாட்டிற்குப் பணியாற்றிவிட்டு கட்டுநாயக்காவில் விமானமேறினான். கொழும்பு உருவாக்கிய Doctorஉம் கட்டுநாயக்காவில்தான் விமானமேறினான். இப்போது எங்களிற்கு பணம் பலரூபங்களில் வந்தது.  அவற்றின் பெருக்கற் காரணிகள் அப்பாவிற்கு சந்தோசம் தந்தது. ஆனால் அவர் வெளிக்காட்டவில்லை. நாங்கள் புதிதாகக் கட்டிய வீடு எல்லாவற்றையும் பறை சாற்றியது.

ஊரில் செத்தவீடுகளிலும், கல்யாணவீடுகளிலும் அப்பா முக்கிய நபரானார். நல்லதொரு கதிரை அவருக்காகக் காத்திருந்தது, அல்லது மற்றவர்களினால் எழுந்து தரப்பட்டது. பின்னையது அப்பாவிற்குப் பிடித்திருந்தது. சின்னத்தலையாட்டல் அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகள் இவை அப்பாவினால் மற்றவர்களுக்குத் தரப்படும் மரியாதை. முக்கியமான விவாதங்களில் அப்பா ஒன்றிரண்டு கருத்துக்கள் உதிர்க்கலானார். உதிர்த்தவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்குப் பெண்பிள்ளைகள் இருந்தனர், அல்லது பணம் தேவைப்பட்டது. எங்கள் வீட்டுப் பணத்திற்கு குட்டியும் போடத் தெரிந்திருந்தது.

அண்ணர்மார் திரும்பிவந்து தங்களுடன் இன்னும் இருவரையும் கூட்டிச் சென்றனர். இப்போது எங்களிற்கு சுற்றம் கூடிவிட்டது. பெரியக்காவும் ஒரு Engineerஐ அல்லது Doctorஐத்தான் மணமுடிக்கலாம் என்றளவிற்கு படித்து முடித்துவிட்டு பிள்ளைகளுக்குப் படிபித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் பெரியண்ணை மாப்பிள்ளை பார்த்திருந்தார். (அண்ணி என்று சொன்னால் அடிக்க வருவான்.) அவளும் இராமனிருக்கும் இடம் பறந்து சென்றாள். சின்னக்காவின் செவ்வாய்தோஷம் அவளின் திருமணத்தைப் பின்போட்டது. 'தங்கமான மாப்பிள்ளை' ஒன்று அவளுக்குக் கிடைத்தது அவள் அதிஷ்டம். ஆனால் அவர் பசுத்தோல் போர்த்தியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது. சின்னண்ணை லண்டனில் நல்ல கடிவாளம் போடலாம் எனத் தன்னுடன் சின்னக்கா, அத்தானை அழைத்துவிட்டான்.

இப்போது ஊரில் நான், அப்பா, அம்மா மீதமிருந்தோம். என்னுடைய ஊர்சுற்றல்கள் Result sheetஇல் வேறு வடிவத்தில் வந்திருந்தது. என்னுடைய சகோதரங்களும் இனியும் என்னை அங்கு விட்டால் பிழை என்று தங்களுடன் அழைக்கத் தலைப்பட்டனர். நான் அப்பா, அம்மாவிற்கு உதவி தேவையென்று அங்கேயே இருக்கத் தலைப்பட்டேன். அம்மா இதற்குத் துணை நின்றாள். இதற்குப் பின்னால் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பதுதான் உண்மை. அம்மாவிற்கு இது தெரிய வந்தபோது அம்மாவே முன்னின்று "நீயும் போய்ச் சேர் ராசா" என்று அனுப்பி வைத்தாள்.

பல வெளிநாடுகளும் சுற்றி வந்து தன்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற காலநிலை கொண்ட நாடு Australiaதான் என்று வந்துவிட்ட பெரியண்ணை இங்கு என்னை அழைத்துவிட்டான்.

நானும் வந்தது முதல் படிப்பதும் வேலை செய்வதுமாயிருந்து முழுநேரவேலை செய்யத் தொடங்கி அப்பாவையும் அம்மாவையும் அழைத்தபோது, "உந்தக் குளிருக்குள்ளை நாங்கள் வந்து என்ன செய்யிறது." என்று அப்பா எழுதினார். வீடுகள் வளவுகளைப் பார்ப்பதற்கும் ஆளில்லை என்றார். உண்மைதான் நாங்கள் அனுப்பிய பணத்தை அப்பா ஒரு வலைபோல ஊரில் பரவிப்போட்டிருந்தார். அதில் பல சிக்கலான முடிச்சுக்கள் இருந்தன். முடிச்சுக்களை அப்பாவினாற்தான் அவிழ்க்க முடியும், அவிழ்க்காமல் அப்பாவால் வரவும் முடியாது. அம்மாவும் அயோத்தியை விட்டு வரமாட்டாள் என்று தெரிஞ்சு அமைதியானேன்.

*                     *                     *                       *                      *                      *                        *                        *

இன்று காலை ஒரு Telephone Callஇல் அப்பாவின் மரணம் செய்தியாக வந்தது. பெரியக்கா அழுதுகொண்டே செய்தி சொன்னாள். என்ன செய்வது இப்படிப் போய்விட்டாரே என்று குளறி அழுதாள். ஒரு கட்டத்தில் வரப்போகும் Telephone Bill அவளது அழுகையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பின் அத்தான் பேசினார். அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். கவலைப்படாதே என்று சொன்னார். அண்ணைக்குப் பக்குவமாய் செய்தி சொல்லச் சொன்னார். ஆங்கிலத்தில் ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வைத்தார்.

அண்ணையிடம் போய் நேரம் பார்த்து சேதி சொன்னேன். கண்ணைமூடி அமைதியாய் இருந்தார். உடம்பு மட்டும் இலேசாகக் குலுங்கியது. அண்ணி அழுதாள். "பேரப்பிள்ளைகளைக் கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்று சொல்லியழுதாள். பின் தேநீர் தந்து ஆறுதல் சொன்னாள். குடித்துவிட்டு வந்தேன்.

வீடு வந்து கட்டிலில் படுத்திருந்தேன். சின்னக்கா Phone பண்ணினாள். சத்தியமாய் அழுதாள். என்னை, அப்பாவை, தன்னை எல்லாம் நினைத்து கதைகள் பல சொல்லியழுதாள். "நீயாவது அவையளோடை கடைசிவரைக்கும் இருந்திருக்கலாம்தானே" என்றாள். நான் அமைதியாய் எல்லாம் கேட்டேன். பின் தானே தன் பிழையுணர்ந்து "நீ அவளைக் கூப்பிடு; நான் உனக்கு Support" என்றாள். சரி பார்க்கலாம் என்றேன்.

அவளுக்கு நான் தான் Telephone Billஐ ஞாபகமூட்டினேன். பின்பும் ஏதோ எல்லாம் கூறியழுதாள். தான் என்னைக் கவலைப்படுத்துவதை உணர்ந்தபோது, பின்னர் Phone பண்ணுவதாய் கூறிவைத்தாள்.

யாழ்ப்பாணம் போவது பற்றி யாரும் நினைக்கவுமில்லை. பேசவும் இல்லை. அந்தளவிற்கு அங்கு பிரச்சனைகள் இருந்தன.

தூரத்தே தீயணைப்பு வண்டியொன்றின் சங்கொலி கேட்டது. அப்பாவிற்கு யார் கொள்ளி வைத்திருப்பார்கள் என்று நினைத்தபோது அழுகை வருவது போலிருந்தது. அழவேண்டும் போலவும் இருந்தது. மெல்லமாய் போய்  Shower ஐத் திறந்துவிட்டு தண்ணீரில் நின்றபடி அழத்தொடங்கினேன்.

 

மரபு
புரட்டாதி - ஐப்பசி
1991

Monday, September 29, 2014

எங்கள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி (கனக்ஸ்) சில ஞாபகங்கள்-01

அதிபரின் வருகை


எழுபதுகளின் நடுப்பகுதி. அந்த நாட்களில் மகாஜனாவிற்கு அதிபர்கள் வருவதும் போவதுமாயிருந்த காலம். மகாஜனா எல்லாவற்றிலுமே சோர்ந்திருந்தது. ஆனால் உதைபந்தாட்டத்தில் மட்டும் அது நடக்காது என்று நிலைநாட்டிக் கொண்டிருந்த காலம்.

நாங்களும் அதற்கேற்ப, மதியஉணவு நேரம் சாப்பிட்டதுபாதி சாப்பிடாததுபாதி என நாங்கள் எல்லோரும் நாற்சாரவீட்டின் நடுவே அமைந்த வெளிபோல சுற்றிவர வகுப்பறைகள் சூழவுள்ள, மகாஜனாவிற்கு மட்டுமே சிறப்பாக அமைந்த எங்கள் விளையாட்டு மைதானத்தில் இறங்கிவிடுவோம் ஆளாளுக்கு ஐந்து, பத்துசதமென போட்டுச் சேர்த்த காசில், வகுப்புக்கோர் பந்தென கண்ணப்பர் கடையிலும், ரங்கநாதன் கடையிலும் இரண்டரை ரூபாவிற்கு வாங்கிய இரப்பர்பந்துகளுடன் மைதானத்தின் எல்லா மூலைகளிலுமிருந்து நாங்கள் களம் இறங்குவதே தனி அழகு!!.

[caption id="attachment_651" align="aligncenter" width="1000"]எங்கள் அதிபர் - கனக்ஸ் - சில ஞாபகங்கள்-01 www.saatharanan.com-050 எங்கள் அதிபர் - கனக்ஸ் - சில ஞாபகங்கள்-01[/caption]

மைதானத்தில் ஓரு பத்துப்பன்னிரண்டு பந்துகள் உருண்டு விளையாடும். ஒவ்வொரு கோல்போஸ்ட்டிற்கும் பல கோலிகள் இருப்பார்கள். யாராவது ஒரு கோலி எந்தப்பந்து தனது பந்தென தெரியாமல் மாறிப்பிடித்துவிட ஒரே கலாட்டாவாகப் போய்விடும். எனினும் அடுத்தநிமிடமே விளையாட்டு ருசியில் எல்லாம் மறந்து மைதானம் திரும்பவும் களைகட்டத் தொடங்கிவிடும். மேலும் மைதானம் முழுக்க, முழுக்க ஒரே குதூகலம் கலந்த கூச்சலால் நிறைந்திருக்கும்.

மதியஉணவு நேரம் முடிந்ததற்கான பெல் அடித்ததுகூட தெரியாமல் (தெரிந்தாலும் தெரியாதது மாதிரி) களைக்கக் களைக்க விளையாடிக் கொண்டிருப்போம். வகுப்பிற்கு ஆசிரியர் போவதைப் பார்த்த பின்னர்தான் ஏலாக்குறையாக வகுப்புகளிற்குப் போவோம். பின்னர் கடைசிபெல் அடிக்குமட்டும் எந்தப்பாடமும் காதில் நுழையாது களைப்பாறத்தான் சரியாகவிருக்கும். தேவாரம் படித்துமுடிந்ததுதான் தாமதம், கேத்திரகணிதத்தில் படித்த c < a + b  தேற்றத்தை நடைமுறையில் நிறுவும் வண்ணம் மைதானத்தின் குறுக்கே விழுந்து கடந்து வீட்டுக்கு ஓடிப்போய் விடுவதிலேயே குறியாகவிருப்போம். ஏறக்குறைய பள்ளிக்கூடம் போவதே விளையாடத்தான் என்றிருந்தோம்.

என்றும்போல அன்றைக்கும் மதியஉணவு நேரம் எல்லா மூலைகளிருந்தும் குதூகலமாக நாங்கள் வந்து விளையாட ஆரம்பிக்கும் முன்னரே ஒரு ஆசிரியர் வந்து இனிமேல் மைதானத்தில் விளையாடமுடியாது எல்லோரும் வகுப்பறைகளிற்கு போகலாம். என்று உத்தரவிட்டார்.

ஏன்? இது எங்கள் கேள்வி.

புதிய அதிபர் கல்லூரியைப் பொறுப்பேற்றிருக்கின்றார். அவருடைய உத்தரவு இது. என்று சொல்லிவிட்டு எங்களைக் கலைப்பதிலேயே குறியானார். சிலர் வகுப்பறைகளிற்கு போக புதியஅதிபரைப் பார்க்கும் ஆர்வத்தில் அதிபரின் அறைக்குச் சென்றோம். அங்கு அதிபர் இருக்கவில்லை. எனவே பக்கத்திலுள்ள நூலகத்திற்கு சென்று பத்திரிகைகளை புரட்டினோம். அன்றைய ஈழநாடு பத்திரிகையில் முதற்பக்கத்தில் புத்தூர்க் கல்லூரி மாணவர்கள் அதிபர் இடமாற்றத்தை ஆட்சேபித்து வகுப்புக்களைப் பகிஷ்கரித்தனர் என்பது செய்தியாக வந்திருந்தது. அவரேதான் எங்கள் புதிய அதிபர் என்ற செய்தியும் கூடவேயிருந்தது. இப்படித்தான் புதிய அதிபர் வந்த புதினம் எங்களை வந்தடைந்தது.
அந்தநாட்களில் அடிக்கடி அதிபர்கள் மாறுவது எங்கள் கல்லூரியின் வழக்கமாக இருந்தது. எனவே புத்தூர் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த புதுஅதிபரும் திரும்பிவிடுவாரோ எனப்பயந்தோம். ஆனால் விரும்பி வந்தவர் திரும்பப் போவாரா? என்ன!!

அன்று முழுக்க கடைசிபெல் அடிக்குமட்டும் எங்கள் பேச்சும், சிந்தனையும், புதிய அதிபரைப்பற்றியே இருந்தது. வழமைபோல தேவாரம் படித்து முடிந்தவுடன் மைதானத்தின் குறுக்கே விழுந்து நாங்கள் ஓடிப்போக ஆயத்தமானபோது மைதானத்தின் நடுவே White & White ஆக நின்றுகொண்டிருந்த அந்த நெடியமனிதர் மைதானத்தின் குறுக்கே யாரும் வராமல் ஓரமாக ஒழுங்காகப் போகுமாறு வழிகாட்டியவாறு, கேத்திரகணித தேற்றத்தின் மறுவளமும் a + b > c  உண்மை என்பதை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்..

அன்றிலிருந்து எங்களிற்கு வழிகாட்டிய, நாங்கள் செல்லமாக கனக்ஸ் என்றழைக்கும், அந்த நெடிய மனிதர், திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எங்கள் கல்லூரியில் நிகழ்த்திய பௌதிக, இரசாயன மாற்றங்கள் பலவற்றில், என் ஞாபகத்திலிருக்கும் ஒன்றிரண்டை மாத்திரம் ஒரு சிறுதொடராக இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

அன்புடன்.
சாதாரணன்.

(தொடரின் மிகுதி விரைவில்)


Image Credit : www.mahajana.org


பிற்குறிப்பு: இக்கட்டுரை 2002ஆம் ஆண்டு எங்கள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்தபோது மெல்பேண் பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட விழாவில் நான் எழுதி வாசித்த கட்டுரை. இது திருத்தி விரிவாக்கப்பட்டுள்ளதின் முதற்பகுதி.



 எனது வரைவுகள் அவ்வப்போது மெருகூட்டப்படுவதினால் எப்போதுமே புதுப்பொலிவு பெறுகின்றன. திரும்பவும் வரமறக்காதீர்கள்.

எங்கள் அதிபர் - கனக்ஸ் - சில ஞாபகங்கள்-01

அதிபரின் வருகை


எழுபதுகளின் நடுப்பகுதி. அந்த நாட்களில் மகாஜனாவிற்கு அதிபர்கள் வருவதும் போவதுமாயிருந்த காலம். மகாஜனா எல்லாவற்றிலுமே சோர்ந்திருந்தது. உதைபந்தாட்டத்தில் மட்டும் அது நடக்காது என்று நிலைநாட்டிக் கொண்டிருந்த காலம்.

நாங்களும் அதற்கேற்ப, மதியஉணவு நேரம் சாப்பிட்டதுபாதி சாப்பிடாததுபாதி என நாங்கள் எல்லோரும் நாற்சாரவீட்டின் நடுவே அமைந்த வெளிபோல சுற்றிவர வகுப்பறைகள் சூழவுள்ள, மகாஜனாவிற்கு மட்டுமே சிறப்பாக அமைந்த எங்கள் விளையாட்டு மைதானத்தில் இறங்கிவிடுவோம் ஆளாளுக்கு ஐந்து, பத்துசதமென போட்டுச் சேர்த்த காசில், வகுப்புக்கோர் பந்தென கண்ணப்பர் கடையிலும், ரங்கநாதன் கடையிலும் இரண்டரை ரூபாவிற்கு வாங்கிய இரப்பர்பந்துகளுடன் மைதானத்தின் எல்லா மூலைகளிலுமிருந்து நாங்கள் களம் இறங்குவதே தனி அழகு!!.

[caption id="attachment_651" align="aligncenter" width="1000"]எங்கள் அதிபர் - கனக்ஸ் - சில ஞாபகங்கள்-01 www.saatharanan.com-050 எங்கள் அதிபர் - கனக்ஸ் - சில ஞாபகங்கள்-01[/caption]

மைதானத்தில் ஓரு பத்துப்பன்னிரண்டு பந்துகள் உருண்டு விளையாடும். ஒவ்வொரு கோல்போஸ்ட்டிற்கும் பல கோலிகள் இருப்பார்கள். யாராவது ஒரு கோலி எந்தப்பந்து தனது பந்தென தெரியாமல் மாறிப்பிடித்துவிட ஒரே கலாட்டாவாகப் போய்விடும். எனினும் அடுத்தநிமிடமே விளையாட்டு ருசியில் எல்லாம் மறந்து மைதானம் திரும்பவும் களைகட்டத் தொடங்கிவிடும். மேலும் மைதானம் முழுக்க, முழுக்க ஒரே குதூகலம் கலந்த கூச்சலால் நிறைந்திருக்கும்.

மதியஉணவு நேரம் முடிந்ததற்கான பெல் அடித்ததுகூட தெரியாமல் (தெரிந்தாலும் தெரியாதது மாதிரி) களைக்கக் களைக்க விளையாடிக் கொண்டிருப்போம். வகுப்பிற்கு ஆசிரியர் போவதைப் பார்த்த பின்னர்தான் ஏலாக்குறையாக வகுப்புகளிற்குப் போவோம். பின்னர் கடைசிபெல் அடிக்குமட்டும் எந்தப்பாடமும் காதில் நுழையாது களைப்பாறத்தான் சரியாகவிருக்கும். தேவாரம் படித்துமுடிந்ததுதான் தாமதம், கேத்திரகணிதத்தில் படித்த c < a + b  தேற்றத்தை நடைமுறையில் நிறுவும் வண்ணம் மைதானத்தின் குறுக்கே விழுந்து கடந்து வீட்டுக்கு ஓடிப்போய் விடுவதிலேயே குறியாகவிருப்போம். ஏறக்குறைய பள்ளிக்கூடம் போவதே விளையாடத்தான் என்றிருந்தோம்.

என்றும்போல அன்றைக்கும் மதியஉணவு நேரம் எல்லா மூலைகளிருந்தும் குதூகலமாக நாங்கள் வந்து விளையாட ஆரம்பிக்கும் முன்னரே ஒரு ஆசிரியர் வந்து இனிமேல் மைதானத்தில் விளையாடமுடியாது எல்லோரும் வகுப்பறைகளிற்கு போகலாம். என்று உத்தரவிட்டார்.

ஏன்? இது எங்கள் கேள்வி.

புதிய அதிபர் கல்லூரியைப் பொறுப்பேற்றிருக்கின்றார். அவருடைய உத்தரவு இது. என்று சொல்லிவிட்டு எங்களைக் கலைப்பதிலேயே குறியானார். சிலர் வகுப்பறைகளிற்கு போக புதியஅதிபரைப் பார்க்கும் ஆர்வத்தில் அதிபரின் அறைக்குச் சென்றோம். அங்கு அதிபர் இருக்கவில்லை. எனவே பக்கத்திலுள்ள நூலகத்திற்கு சென்று பத்திரிகைகளை புரட்டினோம். அன்றைய ஈழநாடு பத்திரிகையில் முதற்பக்கத்தில் புத்தூர்க் கல்லூரி மாணவர்கள் அதிபர் இடமாற்றத்தை ஆட்சேபித்து வகுப்புக்களைப் பகிஷ்கரித்தனர் என்பது செய்தியாக வந்திருந்தது. அவரேதான் எங்கள் புதிய அதிபர் என்ற செய்தியும் கூடவேயிருந்தது. இப்படித்தான் புதிய அதிபர் வந்த புதினம் எங்களை வந்தடைந்தது.
அந்தநாட்களில் அடிக்கடி அதிபர்கள் மாறுவது எங்கள் கல்லூரியின் வழக்கமாக இருந்தது. எனவே புத்தூர் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த புதுஅதிபரும் திரும்பிவிடுவாரோ எனப்பயந்தோம். ஆனால் விரும்பி வந்தவர் திரும்பப் போவாரா? என்ன!!

அன்று முழுக்க கடைசிபெல் அடிக்குமட்டும் எங்கள் பேச்சும், சிந்தனையும், புதிய அதிபரைப்பற்றியே இருந்தது. வழமைபோல தேவாரம் படித்து முடிந்தவுடன் மைதானத்தின் குறுக்கே விழுந்து நாங்கள் ஓடிப்போக ஆயத்தமானபோது மைதானத்தின் நடுவே White & White ஆக நின்றுகொண்டிருந்த அந்த நெடியமனிதர் மைதானத்தின் குறுக்கே யாரும் வராமல் ஓரமாக ஒழுங்காகப் போகுமாறு வழிகாட்டியவாறு, கேத்திரகணித தேற்றத்தின் மறுவளமும் a + b > c  உண்மை என்பதை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்..

அன்றிலிருந்து எங்களிற்கு வழிகாட்டிய, நாங்கள் செல்லமாக கனக்ஸ் என்றழைக்கும், அந்த நெடிய மனிதர், திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எங்கள் கல்லூரியில் நிகழ்த்திய பௌதிக, இரசாயன மாற்றங்கள் பலவற்றில், என் ஞாபகத்திலிருக்கும் ஒன்றிரண்டை மாத்திரம் ஒரு சிறுதொடராக இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

அன்புடன்.
சாதாரணன்.

(தொடரின் மிகுதி விரைவில்)


Image Credit : www.mahajana.org


பிற்குறிப்பு: இக்கட்டுரை 2002ஆம் ஆண்டு எங்கள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்தபோது மெல்பேண் பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட விழாவில் நான் எழுதி வாசித்த கட்டுரை. இது திருத்தி விரிவாக்கப்பட்டுள்ளதின் முதற்பகுதி.


Saturday, March 15, 2014

மலையாளத் திரைப்பட விமர்சனம் 'பிலிப்ஸ்உம் அந்தக் குரங்குப் பேனையும்' (Philips and the Monkey Pen)

நீண்ட நாளைக்குப் பின்னர் ஒரு மன‌துக்கு இதமான (feel good) சினிமா பார்த்த உணர்வை சற்று அதீதமாகவே இந்த மலையாளப் படம் தந்திருந்தது. முழுக்குடும்பத்தினரும் பார்த்து இரசிக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாகத் திறம்பட எடுத்திருக்கிறார்கள். மலையாளத் திரைப்படங்களில், யதார்த்தத்திற்கு மிக அருகில் காட்சிப்படுத்திவதினால் உங்களை திரைக்குள் உள்வாங்கும் மந்திரவித்தையை இலகுவாக நிகழ்த்திவிடுவார்கள்.

[caption id="attachment_634" align="aligncenter" width="575"]படத்தின் கதாநாயகர்கள் இவர்கள் தாம்!! www.saatharanan.com-049 படத்தின் கதாநாயகர்கள் இவர்கள் தாம்!![/caption]

இருந்தபோதிலும் இத்திரைப்படத்தில் 'இது உங்கள் அனைவரினதும் உண்மைக்கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்' (இது படத்தின் பன்ச் லைன்) என்று சொல்லி எங்கள் பால்யகாலத்திற்கு அழைத்துச் சென்று வெகுஇலகுவாக அந்த மந்திரவித்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் கதாநாயகர்கள் இந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் பட்டாளம்தான். கூடவே ஜெயசூர்யா, ரம்யா நம்பீசன், இன்னோசன்ற், விஜய்பாபு, மற்றும் முகேஷ் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
முழுநீளத் திரைப்படக் குறும்புகளுக்கு இந்த ஒரு ட்ரெய்லர் குறும்பு பதம்.

திரைப்படம் தற்கால சிறுவர்களின் நடைமுறைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப்பங்களெனக் காட்சிப்படுத்திய வண்ணம் பயணித்திருந்தாலும், படம் பார்க்கும் அனைவருக்கும் பொருந்தும் குறும்புகளோடு திரைக்கதையை அமைத்ததுதான் படத்தின் மிகச்சிறப்பு. இளம் இயக்குனர்களான றோயின் தோமஸ் (Rojin Thomas), சனில் முகமட் (Shanil Muhammed)உம் இணைந்து திரைக்கதை அமைத்து இயக்கி கலக்கியிருக்கிறார்கள். இது இவர்களின் முதற்திரைப்படம்.

படத்தில் இராகுல் சுப்பிரமணியத்தின் பின்னணி இசை பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். இவருக்கும் இது முதற்திரைப்படம். இசை அமைதியாக இருக்கவேண்டிய இடத்தில் அமைதியாகவும், தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தருணங்களில், துருத்திக்கொண்டு தெரியாமலும் வெளிப்பட்டிருக்கிறது. கடவுளின் சொந்த நாட்டின் அழகை நீல் டி குன்கா (Neil D' Cunha) வின் ஒளிப்பதிவு வெகுசிறப்பாகவே காட்டியுள்ளது. அதிலும் கதாநாயகர்களின், கதாநாயகன் குடியிருக்கும் வீடிருக்கும் சூழலின் அழகிருக்கிறதே அவ்வளவு அழகு. சான்ஸே இல்லை! அனுபவித்து பார்க்கலாம்.

படத்தில் கதையே இல்லையா? தனியக் குறும்புகள்தானா? என்று கேட்டுவிடாதீர்கள். நான் விமர்சனம் என்றபெயரில் காட்சிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக கூறுவதில் சிஞ்சிற்றேனும் உடன்பாடில்லாதவன். ஒன்று மட்டும் கூறலாம். பெற்றோருக்கும், பிள்ளைகளும் இடையே உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை நன்றாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். கதை தாராளமாக உண்டு. ஏமாற மாட்டீர்கள்.

திரைப்படத்தை நம்பிப் பார்க்கலாம். ஒரு முழுநீள நல்ல படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வை அடைவீர்கள், உங்களையும் அறியாமல் உங்கள் பால்யகாலத்திற்கு சென்றுவிடுவீர்கள், என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அன்புடன்
சாதாரணன்

பிற்குறிப்பு : படத்தின் பெயரை கேரள கலாச்சார வழக்கத்தின்படி சரியாக தமிழ்ப்படுத்தினால் ' பிலிப் குடும்பத்தினரும் அந்தக் குரங்குப்பேனையும்' என்றுதான் சொல்ல வேண்டும்.

Friday, February 14, 2014

சினிமா இரசனையில் பாலு மகேந்திரா உருவாக்கிய மாற்றம்

சினிமா இரசனையில் பாலு மகேந்திரா உருவாக்கிய மாற்றம்


சின்னவயதில் கொழும்பிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலுமென‌ சினிமாப் படங்களைத் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டாடிய ஆரம்ப காலங்களில் ஒரு சண்டைப்பிரியனாக எம்.ஜி.ஆர் இரசிகனாகவிருந்து, பின்னர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும் வேளைகளில் ஒரு தீவிர சிவாஜி இரசிகனின் நக்கல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஒரே இலகுவான வழி நடிப்புப்பிரியனாக மாறிவிடுவதுதான் என்று சிவாஜி இரசிகனாகவும் மாறிவிட்டேன்.
அமரர் பாலு மகேந்திரா

ஆனால் நாங்களும் வளர, தொழில்நுட்பமும் வளர்ந்தபோது தியேட்டர்களில் பார்த்த சினிமாவை, வீடியோப் படக்காட்சிகளென அளவெட்டி, சுற்றுவட்ட கிராமங்களின் மூலைமுடுக்குகள் எங்கிலும் மூன்று ரூபாய்க்கு இரண்டு படங்களென மலிவுவிலையில் பார்த்தவேளைகளில், கறுப்பு வெள்ளை இரஜினியின் ஸ்டைல் இரசிகனாக மாறியிருந்தேன்.

இப்படி சகட்டுமேனிக்கு அளவெட்டியிலும், சுற்றுவட்ட கிராமங்களிலும் வீடியோ படக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்த தருணத்தில் எங்கள் பால்ய நண்பன் பிரபா, அளவெட்டி ஐயனார் கோவிலுக்கு பக்கத்து வளவில் காட்டவெளிக்கிட்ட படம்தான் 'முள்ளும் மலரும்'. அன்று பின்னேரம் லவுட்ஸ்பீக்கரில் ஊரைச் சுற்றி எனௌன்ஸ் பண்ணிவிட்டு, படம் காட்டவிருந்த இடத்திலிருந்து பாட்டுப்போட்டு எங்களை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான். சனமும் அவனின் அழைப்பிற்கு குறைவைக்காமல் வீடியோவில் இரஜினியின் புதுப்படமொன்று பாக்கப்போற‌ புளுகத்திலை எக்கச்சக்கமாக‌ கூடியிருந்தது.

ஆனால் படம் தொடங்கவிருந்த இறுதித் தருணத்தில், வீடியோப் படக்காட்சிகளுக்கு எதிராக‌ இயங்கிய கோஷ்டியொன்று கரண்ட் கம்பிகளுக்கு,  சைக்கிள் செயினை எறிந்து கரண்டைக் கட் பண்ணிவிட்டார்கள். சனமும் 'சரி, அப்ப குடுத்த காசுக்கு அரோகராத்தான்' என்று கவலைப்பட்டு, அரசல் புரசலாக கதைவழிப்பட‌ த் தொடங்கியிட்டுது.

ஆனால் எதற்குமே சளையாமல் எங்கடை பால்யநண்பன் பிரபா சரியா உணர்ச்சி வசப்பட்டு, குரல் தளதளக்க‌ "ஒருத்தரும் ஒண்டுக்கும் கவலைப் படாதையுங்கோ, வீட்டையும் போகாதையுங்கோ இண்டைக்கு எப்படியும் உங்களுக்கு நான் படம் காட்டாமல் விடமாட்டன்" என்று கத்திச் சொல்லிவிட்டு அயல் கிராமமான மல்லாகத்திற்குப் போய் மாட்டுவண்டியில் லைற் எஞ்சின் பிடிச்சுக்கொண்டு வந்து, சொன்னமாதிரியே நள்ளிரவில் எங்களுக்கு தன் கைக்காசில் நஷ்டப்பட்டு, விடாப்பிடியாக‌ காட்டிய படம்தான் "முள்ளும் மலரும்".  படம் முடியேக்கை விடியத்தொடங்கியிருந்தது.  அதுபோல எங்கள் இரண்டு, மூன்று மணிநேரக் காத்திருப்பும் வீண்போகாமல் "முள்ளும் மலரும்" தமிழில் ஒரு நல்ல சினிமாவை அடையாளம் காட்டி எங்கள் இரசனையிலும் ஒரு விடியலை ஏற்படுத்தியது. நன்றி பிரபா.

அடுத்தநாள் வாசிகசாலையில், "எடேய் படத்திலை கதை நல்லம், நடிப்பு நல்லம், எல்லாத்தையும் விட பாட்டுக்கள் வித்தியாசமாகவிருந்தது கவனிச்சனிங்களோ அதிலும் 'செந்தாழம் பூவே" சுப்பரடாப்பா" என்ற எங்கள் கத்துக்குட்டித்தனமான விமர்சனங்களுக்கூடான வினாக்களுக்கு ஆனந்தவிகடனின் விளக்கமான விமர்சனம் விடையளித்தது. இப்படித்தான் நாங்கள் மகேந்திரனின் டைரக்க்ஷனுக்கும், பாலு மகேந்திராவின் கமெராவுக்கும் இரசிகர்களாகி மொத்தத்தில் நல்ல சினிமாக்களை இரசிக்கத் தொடங்கினோம்.



பின்னர் பேப்பர்களில் வந்த செய்திகளின் மூலம் பாலு மகேந்திரா ஈழத்தவராம், மட்டக்களப்பில் பிறந்தவராம், வட்டுக்கோட்டை ஜஃப்னா கொலிஜிலைதான் படிச்சவராம் என்றெல்லாம் தெரியவர நாங்கள் இன்னும் பாலு மகேந்திராவிற்கு நெருக்கமாகி, எங்களவர் என்ற உணர்வோடு அவரின் சினிமாக்களை மிகவும் இரசிக்கத் தொடங்கினோம்.

பேந்தென்ன!, பறுவதக்காவின்ரை வீட்டுப் புளியடிக்குக் கீழே 'அழியாத கோலங்கள்', சைலண்ணையின்ரை வீட்டுப் பின்வளவிலே 'மூடுபனி' வாரம் இருபடமென கிரமாகக் காட்டிய சிறுவிளான் மணியக்காவின்ரை வீட்டு முற்றத்திலை 'மூன்றாம் பிறை" என்று பாலு மகேந்திராவின் படமொன்றையும் தவறவிடாமல் நாங்கள் பார்க்கத்தொடங்கினோம்.

அமரர் பாலு மகேந்திரா மறைந்தாலும் அவர் எங்கள் சினிமா இரசனையில் உருவாக்கிய மாற்றம் அவரை என்றென்றும் எங்கள் நினைவில் வைத்திருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அன்புடன்
சாதாரணன்

Saturday, January 25, 2014

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2014) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் மாத்திரமே பிரத்தியேகமாக விளையாடப்படும் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட (Australian rules football) வீரரும், இனத் துவேஷத்துக்கு எதிராக உத்வேகமாக செயற்படுவருமான Adam Goodes அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.

[caption id="attachment_605" align="aligncenter" width="650"]Australian of the year, Adam Goodes with Australian Prime Minister Hon Tony Abbott MP www.saatharanan.com-045 Australian of the year, Adam Goodes with                                                                                                            Australian Prime Minister Hon Tony Abbott MP[/caption]

Adam Goodes அவர்கள் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் (Australian Football League) Sydney Swans கழகத்திற்காக விளையாடி வருகின்றார். அத்துடன் Adam Goodes அவர்கள் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட அதியுயர் விருதான Brownlow Medal ஐ இரு தடவைகள் பெற்றுக் கொண்டுள்ளவருமாவர். மேலும் இவர் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களோடு இணைந்து விளையாட்டு மற்றும் சமூகப்பணிகளில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள் - http://www.australiaday.org.au/

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள் - http://www.australianoftheyear.org.au/

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Adam Goodes அவர்களின் விபரங்கள் - http://en.wikipedia.org/wiki/Adam_Goodes

ஆஸ்திரேலியாவில் மாத்திரமே பிரத்தியேகமாக விளையாடப்படும் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்டம் பற்றிய விபரங்கள்

http://en.wikipedia.org/wiki/Australian_rules_football

Monday, January 13, 2014

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்!

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.


[caption id="attachment_600" align="aligncenter" width="500"]தைப்பொங்கல் வாழ்த்துகள் www.saatharanan.com-044 தைப்பொங்கல் வாழ்த்துகள்[/caption]

 

வரப்புயர நீருயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர அறுவடை பெருகும்.
அறுவடை பெருக உழவன் உயர்வான்.
உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

அன்புடன்.
சாதாரணன்.

இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.

http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

http://www.pongalfestival.org/pongal-festival.html

இது ஒரு மீள்பதிவு.