Wednesday, January 30, 2013

நகல் - ஈழத்தமிழரின் உலகத்தரம் வாய்ந்ததொரு குறும்படம்

நகல் - ஈழத்தமிழரின் உலகத்தரம் வாய்ந்ததொரு குறும்படம்


நேற்று நான் பார்த்த‌ இக்குறும்படம், நகல் புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு சான்றுபகரும் மற்றுமொரு படமாகும். குறும்படங்களில் தலைப்பும் வலிமையான‌ பங்காற்றும் என்பதையும் நகல் சொல்லியிருக்கின்றது.

[caption id="attachment_456" align="aligncenter" width="450"]www.saatharanan.com-032 - நகல் - ஈழத்தமிழரின் உலகத்தரம் வாய்ந்ததொரு குறும்படம் நகல் - ஈழத்தமிழரின் உலகத்தரம் வாய்ந்ததொரு குறும்படம்[/caption]

ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வில் தொலைந்துபோகும் உறவின் வலிமையை குறிப்புணர்த்தியதின் மூலம், தன் வலிமையையும் சுட்டிக்காட்டிய நகல், வெறுமனே அதனோடு நின்றுவிடாமல் உலகமயமாக்குதலில், மேலும் நகரமயமாக்குதலில் மனிதன் தொலைத்துக் கொண்டிருக்கும் மனித விழுமியங்களைப் பற்றியும் பொதுவாகச் சொல்லிச் செல்வதன் மூலம், நகல் தன் உலகத்தரத்தை வலிமையாக நிரூபிக்கின்றது.

இப்படத்தில் எனக்கு பிடித்த விடயங்கள். திரைக்கதை முற்றிலும் என்னைக் கவர்ந்தது. சொல்லவந்த சேதியை சொல்வதில் எள்ளளவும் வழுவாமால், அதேவேளை பார்வையாளனின் பலவித ஊகங்களுக்கும் இடமளித்து செல்லும் காட்சிகளினூடாக, திரைக்கதை தொடக்கத்திலிருந்து முடிவுவரை அமைந்தவிதத்தினால், என்னை மிகவும் கவர்ந்தது. இக்குறும் படத்தினை மீண்டும் ஒரு தடவை பார்க்கும்போது இதனை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன்.

திரைக்கதைக்கு துணைபுரிந்த, செறிவுமிக்க, மிகவும் குறுகிய உரையாடல்கள், காட்சிகளின் மூலம் திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டிய ஒளிப்பதிவு, திரைக்கதையின் நகர்வுகளுக்கு ஏற்றவிதத்தில் வேகத்தை கட்டுப்படுத்திய எடிட்டிங் என்பன மிகவும் சிறந்தவிதத்தில் நகலில் அமைந்திருந்தன.

படத்தில் நடித்தவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து, மிகையில்லாத இயல்பான நடிப்பால் திரைக்கதைக்கு நன்கு மெருகூட்டியிருக்கிறார்கள். ரீரெக்காடிங் இசையும் படத்துடன் பார்வையாளனை ஒன்றிணைந்து வைத்திருக்க துணை நிற்கின்றது. படத்தில் குறையே இல்லையா? என்று நீங்கள் கேட்டால், அதற்கு என் பதில் படத்தைப் பார்த்தபின் உங்களுக்கு குறையேதேனும் தெரிகிறதா? என்பதே.

ஒற்றை வரியில் வர்ணிப்பதானால் புலம்பெயர் தமிழரிடமிருந்து உலகத்தரம் வாய்ந்த படங்களை எதிர்பார்க்கலாமென துல்லியமாக‌த் தெரிவிக்கும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று நகல்.

இக்குறும் படத்தில் பங்காற்றியவர்களின் விபரங்கள்

நடிகர்கள் : பொன். தயா, பிரசான், ஜெயா
கதை, திரைக்கதை, இயக்கம் : பொன். தயா
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு : பொன். கேதாரன்
தயாரிப்பு : யாழ் மீடியா

நகல் குறும்படம் தொடர்பான மேலதிகத் தகவல்களைத் தரும் வலையிணைப்புகள்

http://www.youtube.com/user/yaalmedia
http://www.yaalmedia.net
https://www.facebook.com/yaalmedia

Summary : Tamil Short Film Naghal

Cast: Pon Thaya, Prasan & Jaya
Story, Screenplay & Direction: Pon Thaya
Camera & Editing: Pon Ketharan
Produced by Yaal Media

நன்றி : YouTube
Source: Yaal Media

Friday, January 25, 2013

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2013) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்மணி, Ita Buttrose AO OBE பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ சிறப்பானதொரு விருதாகும்.

[caption id="attachment_442" align="aligncenter" width="450"]Australian of the year, Ita Buttrose AO OBE with Australian Prime Minister Hon Julia Gillard MP www.saatharanan.com-031 Australian of the year, Ita Buttrose AO OBE with                             Australian Prime Minister Hon Julia Gillard MP[/caption]

Ita Buttrose, அவர்கள் Australian Women's Weekly, Cleo சஞ்சிகைகளின் ஆசிரியராக மிகக் குறைந்த வயதிலேயே பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். இவர் தற்போது மருத்துவ, சுகாதார துறைகளில் பணியாற்றும் சமூக நிறுவனங்களோடு இணைந்து சமூகப் பணியாற்றி வருகிறார். அவரை நாமும் வாழ்த்துவோம்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

இணைப்புக்கள்
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் Ita Buttrose AO OBE அவர்களின் விபரங்கள்

http://en.wikipedia.org/wiki/Ita_Buttrose

அன்புடன்
சாதாரணன்

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-

Tuesday, January 22, 2013

மிச்சச்சொச்சம் - அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும் அளவெட்டிக்கு வந்த கதை

இன்று நீங்கள் கேட்கப்போவது அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும் அளவெட்டிக்கு வந்த கதை. ஊடகங்களிலை உள்ள பிடிப்பிலை, நான் கேட்ட கேள்விகளாலை (சினிமா பற்றி மடியிலையிருந்துகொண்டு அம்மா, அப்பாட்டை நாடி தடவிக்கேட்ட கேள்விகள் இன்னொரு செட் இருக்குது அதை பின்னுக்கு இன்னொரு பந்தியிலை வடிவாச் சொல்லியிருக்கிறன்.)  நிலைகுலைந்து போனவை எல்லாரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்திச்சினம். பெடியன் ஊடகங்களிலையெல்லோ மூளையை விடுறான். பெடியன்ரை படிப்பெல்லோ கெட்டுக் குட்டிச்சுவராகப்போகுது. இங்கையிருந்தா பெடி குறுக்கை எங்கையாகிலும் போயிடும். யாழ்ப்பாணத்திலை கொண்டுபோய் விட்டாத்தான் சரியென்று முடிவெடுத்திச்சினம்.

யாழ்ப்பாணம் என்றால் படிப்பு, படிப்பென்றால் யாழ்ப்பாணம் என்றிருந்த பொற்காலமது. இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து படித்த காலமது. யாழ்ப்பாணத்து பள்ளிக்கூடங்களின் விடுதிகள் எல்லாம், மலையகம், மட்டக்களப்பு, திருகோணமலையென‌ வெளி மாவட்ட மாணவர்களால் நிரம்பியிருந்த காலம். அப்படி என்னையும், கூப்பனையும் (ரேஷன் கார்டு) கொடுத்து, கொண்டுவந்து விட்ட இடம்தான் அளவெட்டி. உண்மையில் கொழும்பின் கட்டிடகாட்டினிடையே என் வாழ்வு முடங்கிவிடாமல், நல்ல விட்டு, வீராத்தியாக உலாவி, படிப்பிலும் கெட்டித்தனம் காட்டி அளவெட்டியில் நான் வளர்ந்தேன்.

[caption id="attachment_431" align="aligncenter" width="450"]www.saatharanan.com-026 கெப்பிட்டல் தியேட்டர் கொழும்பு[/caption]

இனி என்ரை சினிமாவுக்கு வருவம். உங்களுக்குத் தெரியும்தானே அந்தக்காலத்தில் கொழும்பு போன்ற நகரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சினிமாவுக்குப் போறதெண்டால், நாங்கள் ஊரிலை திருவிழாக்குப் போறமாதிரி, அப்பிடி என்ரை அப்பா, அம்மாவும் நல்ல சோக்கா, டிப்டொப்பா வெளிக்கிட்டு, தம்பியையும் (என்னை) தூக்கிக்கொண்டு வந்து, பப்படவத்தையும், பஞ்சிகாவத்தை ரோட்டும் சந்திக்கிற முக்கிலையிருந்த சுந்தர‌ராஜன் அண்ணையின்ரை பெட்டிக்கடையிலை சோடாவும் வாங்கிக் குடிச்சிட்டு, கெப்பிட்டல் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகேக்கை, அவையளுக்குத் தெரியாது தம்பியும் தியேட்டரிலை இன்னுமொரு படம் காட்டப்போறான் எண்டு.

என்ரை படக்கதை இதுதான். என்ரை படம் பெல் அடிக்கமுதலே கேள்விக்கணைகளோடு தொடங்கிவிடும்.
இதேன் அங்கை பெரியசீலையாலை மூடியிருக்கினம்?
அங்கை ஆக்கள் நடிக்கப்போகினம்.

இப்ப ஆக்கள் அங்கையிருக்கினமே?
பெடி கிட்டப்போய்ப் பார்க்கப்போகுதேயென்ற பயத்திலை,
இல்லை. பெல் அடிக்கத்தான் வருவினம்.
எப்பிடி, எதுக்குள்ளாலை, வருவினம்?
மேலாலை, ஏணி வைச்சு இறங்கி வருவினம்.

இப்பிடி, என்ரை கேள்விகள், படம் தொடங்கின பிறகும் விடாமல் தொடரும்.
ஏன் நாங்கள் எல்லாரும் இருட்டுக்குள்ளையிருக்க அவையள் மட்டும் வெளிச்சத்திலை படம் நடிக்கினம்?
இங்கையிருக்கிற எல்லாருக்கும் அவையளிலை நல்ல விருப்பம். எல்லாருக்கும் நல்லாத் தெரியவேணுமெண்டுதான் வெளிச்சத்திலை படம் நடிக்கினம்.

அப்பிடியே உவையளிலை எனக்கு விருப்பமில்லை. நாகேஷிலைதான் விருப்பம். அவர் எப்ப வருவாரம்மா?
இப்ப வந்திடுவார். கொஞ்சம் சத்தம் போடாமல் இருக்கிறீங்களே!

இனி அடிதான் விழுமெண்ட பயத்திலை. தம்பி கேள்வி கேட்கிறதை விட்டுட்டு கொஞ்சநேர ஆராய்ச்சிக்குப்பிறகு,
அப்போதை அந்த ஓட்டைக்குள்ளாலை வெளிச்சம் வந்தது. இப்ப இந்த ஓட்டைகுள்ளாலையெல்லோ அம்மா வெளிச்சம் வருகுது ஏனம்மா? எண்டு தொடரும். இதுபோல விளங்கப்படுத்த ஏலாத என்ரை கேள்விகளுக்கெல்லாம் நல்ல கிள்ளுத்தான் விளக்கமாக கிடைக்கும். கிள்ளுத்தந்த நோவிலை அழுது அசரப்போகும் என்னை நாகேஷ் வந்துதான் உஷாராக்குவார்.

வந்த நாகேஷ் போறவரைக்கும் துள்ளிக் குதிச்சுப் படம் பாக்கிற நான். நாகேஷ் போனபிறகு
இனி எப்ப நாகேஷ் வருவார்? என்றபடிக்குத் தொடரும்.
படமும் கிளைமாக்ஸை நெருங்க, என்ரை படமும் உச்சக்கட்டத்தையடைந்து இனி நாகேஷ் வரவே மாட்டாரா? என்று கேட்டு தமிழ்ப்படங்களின் ஓட்டத்தை துரிதப்படுத்த உதவிவிட்டு இடைநடுவில் காணாமல் போகும் காமெடியன்களைப் பற்றிக் கவலைப் படத்தொடங்கி விடாமல் ஒரே கேள்வியை திரும்பத், திரும்பக் கேட்கத் தொடங்கிவிடுவேன்.

இவன் தன்ரை படத்தை எல்லாருக்கும் காட்ட வேணுமெண்டுதான் முடிவுகட்டி தியேட்டருக்கே வந்திருக்கிறான் எண்டு சொல்லி சனமெல்லாம் அப்பா, அம்மாவை பார்த்து முறைக்கத் தொடங்கிவிடும்.அப்பாவும், அம்மாவிடம் நீயிருந்து படத்தைப்பார். நான் இவன்ரை படத்திற்கு ஒரு முடிவு கட்டியிட்டு வாறன். எண்டு சொல்லிக் தியேட்டருக்கு வெளியிலை கூட்டிக்கொண்டு வந்து யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்ஸாக பெப்பமின்ற் (கற்பூர இனிப்பு) வாங்கித் தருவார். இதுக்கு மேலையும் இழுத்தால் சனம் இரசிக்காது என்று தெரிந்து நானும் படத்தை முடித்துவிடுவேன்.

இப்பிடி சினிமாவைப் பகுத்தாராய்ந்து பார்த்து வளர்ந்ததினால் வந்த வளர்ச்சி. எனக்குப் பிடித்த தமிழ்ப்படங்களின் பட்டியலை இப்படி தக்கவைத்து, இன்றுவரை தொடர்கிறது.

உதிரிப்பூக்கள், அழியாதகோலங்கள், அவள் அப்படித்தான், என நீளும் பட்டியலில் சமீபத்தில் நந்தலாலா........இன்னும் கிட்டத்தில் அட்டகத்தியும்.....மேலும் நடுவுல கொஞ்சம்.......

ஆனா பாருங்கோ, அங்கையிழுத்து, இங்கையிழுத்து, கடைசியிலை இப்ப எங்கை கொண்டுவந்து விட்டிருக்குதெண்டால் அதுவும் ஊடகத்திலைதானே. தியேட்டரிலை பார்த்த சினிமாவை, இண்டைக்கு வீட்டிலை வீடியோ, டிவிடி, யூடியூப்பிலை எண்டு பார்கிறதிலை தொடரத்தானே செய்யுது.

அன்புடன்
சாதாரணன்.

அடுத்த வெளியீடு : அம்பிகை இல்லம், அளவெட்டி வடக்கு, அளவெட்டி.

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-

Saturday, January 19, 2013

தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயானது கோடைகாலங்களில் பெருமளவு அழிவையேற்படுத்துகின்றது. உடமைகளை மட்டுமல்லாமல் உயிரழிவையும் ஏற்படுத்தும், இப்பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வது ஆஸ்திரேலிய மக்களுக்கு மிக,மிக அவசியமானதொன்று. அதற்கமைய‌ உங்களையும், உங்கள் உடமைகளையும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவதற்கான வழிமுறைகளை, மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவற்சித்திரம், அனிமேஷன் வழியாக சொல்லித்தருகின்றது. எனவே படத்தில் க்ளிக்கி (click) அனிமேஷன் தகவற்சித்திரத்தைப் பார்க்கவும்.

[caption id="attachment_413" align="aligncenter" width="530"]www.saatharanan.com-025-தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்  (Infographics) தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் (Infographics)[/caption]

இத்துடன் ஒரு தகவல் இணைப்பும் பிடிஎவ் (pdf) பைல்லாக உள்ளது. ஓப்பன் பண்ணிப் பார்க்கவும்

http://www.ces.vic.gov.au/__data/assets/pdf_file/0019/152452/99-144.pdf

Summary:Australian Bushfire Survival guides.

Source: www.heraldsun.com.au
நன்றி : www.ces.vic.gov.au

Friday, January 18, 2013

சிறுகவிதை - உண்மை அல்லது குழப்பம்

இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன்.


 

உண்மை அல்லது குழப்பம்


www.saatharanan.com-024

பனைமரத்தின் கீழே


பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப்


பாலென்று சொல்லக்


கள்ளென்று நம்பும்


உலகத்தை என்னவென்று சொல்ல‌


கடவுளே!!


 

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-

Thursday, January 17, 2013

தகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா

தகவற்சித்திரம் - ஆஸ்திரேலியா  (Infographics - Australia)


நான் வாழும் புலமான ஆஸ்திரேலியா பற்றிய சுவாரசிய‌மான தகவல்களை உள்ளடக்கிய தகவற்சித்திரத்தை இன்று உங்களிற்குத் தந்துள்ளேன். வலையுலகில் ஆஸ்திரேலியா பற்றிய பல‌ தகவற்சித்திரங்கள் கொட்டிகிடந்தாலும், இதனை நான் கவனத்திற் கொண்டமைக்கான காரணம் :

ஆஸ்திரேலியா பற்றிய அரிய பல சுவாரசிய‌மான ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களை உள்ளடக்கியமை. அவற்றை நல்ல அழகியல் தன்மையோடு, மிகவும் கனகச்சிதமாக, வடிவாக‌ தகவற்சித்திரத்தில் பார்வைக்கு வைத்ததும், அதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்ததும், என‌க்கு பிடித்தன. ஆங்காங்கே நகைச்சுவையும் உண்டு. இனி மிச்சத்தை தகவற்சித்திரம் சொல்லும்.

இத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click) பிடிஎவ் (pdf) பைல்லாக ஓப்பன் பண்ணிப் பார்க்கவும்.

[caption id="attachment_381" align="aligncenter" width="600"]தகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா தகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா[/caption]

ஆஸ்திரேலியாவிற்கு வாருங்கள். ஆஸ்திரேலியா அதீத‌ அழகானது. ஆஸ்திரேலியா உங்களிற்கு மிகவும் பிடிக்கும்.

அன்புடன்
சாதாரணன்

Summary:

This infographics have information about

Compare the size of Australia with other countries
Australian Slang Language
and many interesting information about Australia and Australian with comedy.
Come to Australia. It's nice here. You like it.

Source: AGDA Australia
நன்றி : AGDA Australia

Monday, January 14, 2013

மிச்சச்சொச்சம் - பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம்

பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம்


றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோவை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம் அல்லது கண்டிருக்கலாம். அந்த நாட்களில் கொழும்பில் அனேகமான வீடுகளில் கனெக்ஷ்சன் கொடுத்திருந்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அது இருக்கவில்லை. எனக்கு அது பிரச்சனையாகவும் இல்லை. என்னை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியும் புஷ்பா அக்கா வீட்டில் றெடிவிஷன் இருந்தது. இந்த ஊடகம் தொடர்பாக பலரையும் திக்குமுக்காட வைக்கும் மட்டற்ற பல கேள்விகள் பாலகனான என்னிடம் அன்று இருந்தன. அதற்கு வரமுதல் றெடிவிஷனைப் பற்றிக் கொஞ்சம் அறிவோம்.

[caption id="attachment_371" align="aligncenter" width="488"]www.saatharanan.com-022- இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ[/caption]

இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ. முதற் படத்தில் காட்டியவாறு நல்ல பவுத்திரமான இடத்தில் உயரே வைக்கப்பட்டிருக்கும். றெடிவிஷனில் தனியே றேடியோ சிலோன் அலைவரிசைகளை மட்டும்தான் கேட்கமுடியும். இரண்டாவது படத்தில் காட்டியவாறு பக்கவாட்டில் தெரிகின்ற‌ சுவிச்சின் ஒவ்வொரு முடுக்கிற்கும், தமிழ், சிங்கள, ஆங்கில அலைவரிசையென மாற்றி, மாற்றி கேட்கமுடியும். கேபிளினூடாக ஒலி அலைகளை றெடிவிஷன் பெறுவதால் நல்ல கிளியராக கேட்கக் கூடியதாகவிருக்கும். சாதாரண றேடியோ மாதிரி கரகரக்காது.

தமிழ் அலைவரிசையில் காலையில் கொஞ்சநேரம் தேசியசேவை, பின்னர் வர்த்தகசேவை. பத்து மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு மணிவரை ஒன்றுமேயில்லை. அதன்பின் இரண்டுவரை வர்த்தகசேவை. திரும்பவும் நாலுமணிவரை ஒன்றுமில்லை. அடுத்து ஆறுவரை வர்த்தகம். பின்னர் பத்துவரை தேசியசேவை. அத்தோடை சரி. அந்நாட்களில் எனக்குப் பிடிச்ச படப்பாட்டு சித்தி படத்தில் இடம்பெற்ற 'சந்திப்போமா, இன்று சந்திப்போமா' .





இனி என்ரை கேள்விகளுக்கு வருவோம். புஷ்பா அக்காவுக்கு அறிவு போதாததாலை அவாவின்ரை அம்மா, இராசாத்தி அன்ரிதான் என்ரை கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பா. அன்ரியை பற்றிச் சொல்லுறதெண்டால் என்றுமே நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன், அவரின் பருமனுக்கேற்றவாறு அரக்கி, அரக்கி திரிந்துதான் வேலைகளைச் செய்வார். கூடவே என் துடுக்கான கேள்விகளுக்குப் பதில்களும் வரும்.

உவை எங்கையிருந்து பாட்டுப்படிக்கினம்?
அந்தப் பெட்டிக்குளையிருந்துதான் பாட்டுப்படிக்கினம்.

எப்பிடி அதுக்குள்ளையிருக்கினம்? சரியான சின்ன ஆக்களே!
இல்லை. பெரிய ஆக்கள்தான். ஆனா அவைக்கு மந்திர, தந்திரமெல்லாம் தெரியும்.

இப்ப எங்கை றேடியோக்காரர் போட்டினம்?
அவை இப்ப சாப்பிடப்போட்டினம்.

இனி எப்ப திரும்ப வருவினம்?
சின்ன முள்ளும், பெரிய முள்ளும் சேர்ந்து, சரிநேரா மேலைபோகேக்கை வருவினம்.

வந்து "சந்திப்போமா" படிப்பினமே?
ஓமோம் படிப்பினம். அச்சாப்பிள்ளையெல்லே சாப்பிட்டு படுங்கோ.

அப்போதை சந்தோஷமாப் படிச்சவை, ஏனிப்ப அழுதழுது படிக்கினம்?
ஆரோ அடிச்சுப்போட்டினம் போலைகிடக்குது.

இனிச் சந்தோஷமாப் படிக்கமாட்டினமே?
அடிச்ச ஆக்களோடை உறவாகியிட்டு, சந்தோஷமா நாளைக்குப் படிப்பினம்.

திரும்ப எங்கை றேடியோக்காரர் போட்டினம்?
அவை இப்ப தேத்தண்ணி குடிக்கப் போயிட்டினம். கொஞ்ச நேரத்தாலை திரும்ப வருவினம்.

இவ்வாறு, அந்நாட்களில் என் முதல் ஊடகத்துடனுடான சகவாசம், என்ரை கேள்விகளுக்கு பதில் சொல்லிக் களைச்சுப்போகும் இராசத்தி அன்ரியின் துணையுடன் பப்படத் தோட்டத்தில் கழிந்தது.

அன்று றெடிவிஷனில் தொடங்கி, நாடகம், சினிமா, பேப்பர், கதைப்புத்தகம், சஞ்சிகைகள், கமெரா, ரிவி, வீடியோ, மற்றும் இன்றைய பல்வகைக் கணினிகளென பல்லூடகங்களோடும், தற்போதைய வலைப்பூ, முகனூல், யூடியுப், ட்விட்டர், கூகிள்பிளஸ், இன்னும் வருமென தொடர்ந்த வண்ணமேயிருக்கும் இன்னோரன்ன சமூக ஊடகங்களோடும், அவை காட்டும் மாஜிக்கோடு ஒன்றிணைந்து இரசித்தவண்ணம் இடையறாது சஞ்சரிக்க, அடாது வினாத்தொடுத்த இந்தப் பாலகனின் லாஜிக்கோடு முற்றிலும் பொருந்திவர சலியாது, அன்று பதிலளித்த இராசத்தி அன்ரிதான் காரணமென்றால், அதில் சற்றும் மிகையில்லை.

சத்தியமா, நான் இராசாத்தி அன்ரிக்கும் இவ்வலைப்பூவைச் சமர்ப்பணம் செய்திருக்கவேணும். மறந்திருக்கவே கூடாது. இராசாத்தி அன்ரி இவ்வலைப்பூ உங்களிற்கும் சமர்ப்பணம்!!

அன்புடன்
சாதாரணன்

பி.கு: மிச்சச்சொச்சத்திற்கு ஒரு சிறிய இடைவேளை (நாலைந்து நாட்கள்தான்). அதுவரை மற்றப்பதிவுகள் தொடரும். மறக்காமல் காணத்தவறாதீர்கள்.

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-


 

Sunday, January 13, 2013

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்!

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.

 

வரப்புயர நீருயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர அறுவடை பெருகும்.
அறுவடை பெருக உழவன் உயர்வான்.
உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

அன்புடன்.
சாதாரணன்.

இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.

http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

http://www.pongalfestival.org/pongal-festival.html

Saturday, January 12, 2013

மிச்சச்சொச்சம் - என் ஆரம்ப நினைவு தெரிந்த நாட்கள்

மிச்சச்சொச்சம் - என் ஆரம்ப நினைவு தெரிந்த நாட்கள்


"அப்பாவின் வேலைமாற்றல் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்ததிலிருந்துதான், ஆரம்பமாகின என் நினைவு தெரிந்த நாட்கள். கொழும்பில் என் வாசம் மருதானையில் பப்படவத்த என்று பரவலாக அறியப்பட்ட பப்படத் தோட்டதில் தொடங்கியது."

நான் பிறந்தது ஊர் மக்களால் "கீளிச்சந்தை ஆஸ்பத்திரி" என்று செல்லமாக அழைக்கப்படும், அளவெட்டி அரசினர் மருத்துவமனையில் தான். பின் எனது ஆரம்ப மழலைக் காலங்களில், அப்பாவின் வேலை காரணமாக திருகோணமலை, உப்புவெளி, என முதலிருவருடங்கள் கழிந்தன. பெற்றோர்கள் என்னை சல்லியம்மன் கோவில், கோணேஸ்வரர் கோவில் என்று நேர்த்திக்காக கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனது முதல் பிறந்த நாளிற்கு ஐந்து விரலிற்கும் ஐந்து மோதிரம் போட்டிருக்கின்றார்கள். ஒன்றுமே எனக்கு நினைவில் இல்லை. எல்லாமே அப்பா, அம்மா, மற்றும் என்னை அங்கு வளர்த்தவர்கள், பிற்காலத்தில் சொல்லிய கதைகள். மற்றப்படி திருகோணமலை, என்ன நிறமென்றே எனக்கு இன்றுவரை தெரியாது. போய்ப்பாக்க வேணுமெண்டு ஆசைதான். பார்க்கலாம்!

[caption id="attachment_346" align="aligncenter" width="450"]நான் பிறந்த "கீளிச்சந்தை ஆஸ்பத்திரி" நான் பிறந்த "கீளிச்சந்தை ஆஸ்பத்திரி"[/caption]

அப்பாவின் வேலைமாற்றல் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்ததிலிருந்துதான், ஆரம்பமாகின என் நினைவு தெரிந்த நாட்கள். கொழும்பில் என் வாசம் மருதானையில் பப்படவத்த என்று பரவலாக அறியப்பட்ட பப்படத் தோட்டதில் தொடங்கியது. பப்படம் (அப்பளம்) செய்வதைக் குடிசைத் தொழிலாக மேற்கொண்டவர்கள் வாழ்ந்த இடம். பல வீடுகளின் முன்பாகவும், அவர்களால் செய்யப்பட்ட ஈரமான பப்படங்கள் காயவிடப்பட்டிருப்பதை என் மழலைக் கண்களால் அன்று கண்டிருக்கின்றேன். இப்போது எப்படியோ தெரியாது.

அன்றைய என் ஞாபகங்கள் என்று சொன்னால், முதலில் வருவது முன்வீட்டு ஆரிபாபா அக்கா. நல்லா ஆம்பிளைகள் மாதிரி ஒய்யாரமாக, ஸ்டைலாக சிகரட் குடிப்பார். அந்த ஏரியாவுக்கே ராணியென்ற தோரணையில் சவுண்டு கொடுத்துக் கதைத்துக்கொண்டு பந்தாவாகத் திரிவார். நல்ல நகைச்சுவையாகவும் பேசுவார். எல்லோரும் சிரிப்பார்கள். எனக்கு விளங்கினாத்தானே? இன்றும் ஆஸ்திரேலியாவில் ந‌ல்ல பந்தாவாக, சிகரெட் குடிக்கும் பெண்களைக் கண்டால் ஆரிபாபா அக்கா ஞாபகத்தில் வந்துபோவார்.

அடுத்த என் ஞாபகம் உங்களுக்கும் பிடிக்கும். என் முதல் ஊடக சகவாசம்; அங்குதான் தொடங்கியது. அது பற்றி நாளை எழுதுகின்றேன்.

அன்புடன்
சாதாரணன்

Friday, January 11, 2013

மிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர்

டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!!

[caption id="attachment_339" align="aligncenter" width="480"]மிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர் மிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர்[/caption]

அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே?

இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டிலை நேரா விடு தம்பி, வந்திட்டம், இனிக் கேட்டுத்தானே ஆகவேண்டும். எண்டும் சொல்லுவியள்.

அதென்னெண்டால், சும்மா ஊரிலை நல்ல சாவதானமாக தோட்ட வரம்புகளிலை, வழுக்கி விடாமல் மெல்ல நடை போட்ட எங்களைக் கொண்டு வந்து fப்றிவேயிலை விரைந்து போகவிட்டுட்டுது வாழ்க்கை. ஆனால் பாருங்கோ என்னதான் வசதிகள் இருந்தாலும் தினமும் எங்கடை கனவிலும், நனவிலும் ஊர் நினைவுதானே வந்து துலையுது. அதைத்தான் மிச்சச்சொச்சத்திலை நானும் ஒரு பிடி பிடிப்பம் எண்டு நினைக்கிறன்.

என்னதான் சுத்தி வளைச்சு சொன்னாலும் இது ஒரு நனவிடை தோய்தல் உத்தியில், சொல்லப்படப்போகின்ற தொடர் என்பதைப் பலரும் புரிந்துகொண்டிருப்பீர்கள். (என்ன தம்பி, இப்ப வண்டில் நேரா வந்திட்டுது போலை கிடக்குது! சரி சரி சொல்லடாப்பா!). ஆனா இப்பிடிக் கனக்கப்பேர் எழுதியிட்டினம், புலம் பெயர்ந்த சூழலில் எனக்குத் தெரிந்தவரையில், இதிலை வலுவிண்ணனான எங்கடை எஸ்.பொ விலை தொடங்கி, அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி, அ.ரவி, சயந்தன், வலையுலகில் கானாப்பிரபா, கே. எஸ். சுதாகர், ஜேகே, மற்றும் பலரென எல்லாரும் ஒரு கரை கண்டுட்டினம். இன்னும் சொல்லினம்.

இதுக்குள்ளை நான் என்னத்தை புதிசாச் சொல்லப்போறன் என்ற சங்கடத்துடனும், எண்டாலும் அவை எழுதினதின்ரை மிச்சத்தையும், சொல்லாமால் விட்ட சொச்சத்தையும் சொல்லலாமெண்ட தைரியத்தோடையும், எனக்குரித்தான தனித்த அனுபவங்களை இங்கை மிச்சச்சொச்சத்திலை நானும் உங்களோடை பங்கிட விரும்புகின்றேன். எதையும் வடிவாச் சொன்னால் கேக்கிற‌ உங்கடை பொச்சத்தை நானும் கொஞ்சம் தீர்ப்பனெண்ட நம்பிக்கையோடை உங்களை நம்பித் தொடங்கிறன். கைவிட்டுடாதையுங்கோ. அத்தோடை குறை, நிறைகளை பின்னூட்டத்திலை சொல்லவும் மறந்திடாதையுங்கோ.

"எல்லாம் சரி தம்பி, டிரெய்லர் காட்டினது காணும். எப்படாப்பா மெய்ன் பிக்சரைப் போடப்போறாய் தம்பி?"

அண்ணை கொஞ்சம் பொறுங்கோ, நாளை முதல்.......

உங்களன்போடை,

சாதாரணன்.

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்- 

Friday, January 4, 2013

சோம்பேறி என்று கவலைப்படுகிறீர்களா?

சோம்பேறி என்று கவலைப்படுகிறீர்களா?


கவலையை விடுங்கள்! உங்கள் சோம்பலுக்கு காரணமான ஜீனையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்கள். நீங்கள் உறக்கத்திலிருந்து விழிப்பதற்கு சிரமப்படுவதற்கு காரணமான இந்த ஜீனேதான் ஒரு முழுநாளுக்குமான உங்கள் உறக்க - விழிப்பு வட்டத்தின் ஒழுங்கமைப்பைத் (sleep cycle rhythms) தீர்மானிக்கின்றது.

ஒரு பழப்பூச்சியை மையமாகக்கொண்டு  அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Dr. Ravi Allada  தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நடாத்திய பரிசோதனைகளின் முடிவுகளின் இது கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தக் கூடியதாகுமெனவும் கூறியுள்ளார்கள்.

இணைப்புக்கள்

செய்தி
http://www.thirdage.com/news/sleep-cycle-rhythms-regulated-genes_2-17-2011

விளக்கமான விபரங்கள்
http://www.innovations-report.com/html/reports/studies/waking_hard_170292.html

முழுமைமையான பரிசோதனை முடிவுகள் (சந்தா தேவை)
http://www.nature.com/nature/journal/v470/n7334/full/nature09728.html