Saturday, January 12, 2013

மிச்சச்சொச்சம் - என் ஆரம்ப நினைவு தெரிந்த நாட்கள்

மிச்சச்சொச்சம் - என் ஆரம்ப நினைவு தெரிந்த நாட்கள்


"அப்பாவின் வேலைமாற்றல் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்ததிலிருந்துதான், ஆரம்பமாகின என் நினைவு தெரிந்த நாட்கள். கொழும்பில் என் வாசம் மருதானையில் பப்படவத்த என்று பரவலாக அறியப்பட்ட பப்படத் தோட்டதில் தொடங்கியது."

நான் பிறந்தது ஊர் மக்களால் "கீளிச்சந்தை ஆஸ்பத்திரி" என்று செல்லமாக அழைக்கப்படும், அளவெட்டி அரசினர் மருத்துவமனையில் தான். பின் எனது ஆரம்ப மழலைக் காலங்களில், அப்பாவின் வேலை காரணமாக திருகோணமலை, உப்புவெளி, என முதலிருவருடங்கள் கழிந்தன. பெற்றோர்கள் என்னை சல்லியம்மன் கோவில், கோணேஸ்வரர் கோவில் என்று நேர்த்திக்காக கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனது முதல் பிறந்த நாளிற்கு ஐந்து விரலிற்கும் ஐந்து மோதிரம் போட்டிருக்கின்றார்கள். ஒன்றுமே எனக்கு நினைவில் இல்லை. எல்லாமே அப்பா, அம்மா, மற்றும் என்னை அங்கு வளர்த்தவர்கள், பிற்காலத்தில் சொல்லிய கதைகள். மற்றப்படி திருகோணமலை, என்ன நிறமென்றே எனக்கு இன்றுவரை தெரியாது. போய்ப்பாக்க வேணுமெண்டு ஆசைதான். பார்க்கலாம்!

[caption id="attachment_346" align="aligncenter" width="450"]நான் பிறந்த "கீளிச்சந்தை ஆஸ்பத்திரி" நான் பிறந்த "கீளிச்சந்தை ஆஸ்பத்திரி"[/caption]

அப்பாவின் வேலைமாற்றல் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்ததிலிருந்துதான், ஆரம்பமாகின என் நினைவு தெரிந்த நாட்கள். கொழும்பில் என் வாசம் மருதானையில் பப்படவத்த என்று பரவலாக அறியப்பட்ட பப்படத் தோட்டதில் தொடங்கியது. பப்படம் (அப்பளம்) செய்வதைக் குடிசைத் தொழிலாக மேற்கொண்டவர்கள் வாழ்ந்த இடம். பல வீடுகளின் முன்பாகவும், அவர்களால் செய்யப்பட்ட ஈரமான பப்படங்கள் காயவிடப்பட்டிருப்பதை என் மழலைக் கண்களால் அன்று கண்டிருக்கின்றேன். இப்போது எப்படியோ தெரியாது.

அன்றைய என் ஞாபகங்கள் என்று சொன்னால், முதலில் வருவது முன்வீட்டு ஆரிபாபா அக்கா. நல்லா ஆம்பிளைகள் மாதிரி ஒய்யாரமாக, ஸ்டைலாக சிகரட் குடிப்பார். அந்த ஏரியாவுக்கே ராணியென்ற தோரணையில் சவுண்டு கொடுத்துக் கதைத்துக்கொண்டு பந்தாவாகத் திரிவார். நல்ல நகைச்சுவையாகவும் பேசுவார். எல்லோரும் சிரிப்பார்கள். எனக்கு விளங்கினாத்தானே? இன்றும் ஆஸ்திரேலியாவில் ந‌ல்ல பந்தாவாக, சிகரெட் குடிக்கும் பெண்களைக் கண்டால் ஆரிபாபா அக்கா ஞாபகத்தில் வந்துபோவார்.

அடுத்த என் ஞாபகம் உங்களுக்கும் பிடிக்கும். என் முதல் ஊடக சகவாசம்; அங்குதான் தொடங்கியது. அது பற்றி நாளை எழுதுகின்றேன்.

அன்புடன்
சாதாரணன்

No comments:

Post a Comment