Wednesday, February 2, 2022

இன்று சின்னக்காவின் 24வது நினைவு தினம்

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 24வது நினைவு தினம்

        அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி

இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 24வது நினைவு தினமாகும். 

நாங்கள் அம்பிகை இல்லத்தில் வசித்த நாட்களில், இன்றைய நாட்களில் பேசுபொருள் ஆகியிருக்கும் இயற்கையோடு ஒன்றிணைந்த உணவுமுறையை கைப்பிடிப்பதில் சின்னக்கா முதன்மையானவராயிருந்தார். அம்பிகை இல்லத்தைச் சுற்றிய வளவுக்குள் கறிமுருங்கை, தூதுவளை, சுண்டங்கத்தரிக்காய், அரைநெல்லி, கறிவேப்பிலை, பப்பாளி, பனை, தென்னை, வேம்பு என மரங்கள் வளர்ந்திருந்தன. கிணற்றடியில் வல்லாரையும், பொன்னாங்காணியும் படர்ந்திருந்தன. இவை தவிர வேலியில் வாதநிவாரணி மரத்துடன் ஒன்றிணைந்து முசுட்டை, குறிஞ்சா, முடக்கொத்தான் கொடிகள் படர்ந்திருந்தன.

இந்தச் செடி, கொடி, மரங்களைப் பராமரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சின்னக்கா விசேட கவனமெடுப்பார். இவைகளின் இலை, காய்,  பூக்களை சின்னக்கா, எங்கள் தினசரி உணவில் சுண்டங்காய்க் கறி, வாதநிவாரணி வறை, வல்லாரை, தூதுவளைச் சம்பல், நெல்லிக்காய் ஊறுகாய், வேப்பம்பூ வடகம், முடக்கொத்தான் இரசம், முசுட்டைச் சொதி, ஒடியல் கூழ் எனப் பல வடிவங்களில் விசேட உணவாக்கி இரண்டறக் கலந்துவிடுவார்.

அன்றைய பால்யத்தில் எங்களுக்கு இவை கைப்பாகவும், உவர்ப்பாகவும் இருந்தாலும் இன்றைய உடல் ஆரோக்கியத்திற்கு அத்திவாரமாகி விட்டதால் சின்னக்காவின் உணவு முறையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும், நாங்கள் சின்னக்காவை அன்புடன் நினைவு கூருகின்றோம்.

அன்புடன்
சாதாரணன்

Tuesday, January 25, 2022

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!! 


இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2022) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, மெல்பேர்ண் மா நகரத்தைச் சேர்ந்தவரும், பாராலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தில் விளையாட்டுகளில் ஆஸ்திரேலியா சார்பில் தங்கப்பதக்கம் வென்ற உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரரான Dylan Alcott OAM அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.

Prime Minister Scott Morrison and Australian of the Year Dylan Alcott OAM



சமீபத்தில் Dylan Alcott OAM அவர்கள், வரலாற்றில் ஆண்களுக்கான எந்த வகையான டென்னிஸ் விளையாட்டுகளிலும் கோல்டன் ஸ்லாம் வென்ற முதல் விளையாட்டு வீரராவார். தனது குழந்தைப் பருவ கனவை நனவாக்கி, டிவி, ரேடியோ மற்றும் போட்காஸ்டிங் எனப் பல ஊடகங்களிலிலும் நிகழ்ச்சிகளை அளித்துவருவதோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக தன்பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு நிதியுதவியும் ஊக்கமும் அளித்துவருகின்றார்.

Dylan Alcott OAM அவர்கள் எழுதிய சுயசரிதை நூலான 'Able'('முடியும்'), ஆஸ்திரேலியாவில் சிறந்த விற்பனையான நூல்களில் ஒன்றாகும்.

இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்


ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்


இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Dylan Alcott OAM அவர்களின் விபரங்கள்