Monday, December 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம் 


முதலில் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

[caption id="" align="aligncenter" width="480"] புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - புதுவருடத் தீர்மானம் [/caption]

இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம்


இடைவெளி விட்டு ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா என்று பதிவதை விட்டு, விட்டு இனி மும்முரமாக பதிவுகளை எழுதவேண்டும் என்பதுதான் எனது இந்தப் புதுவருடத் தீர்மானம். ஒரு பிடி, பிடிப்பம் என்று தீர்மானிச் சிருக்கிறன். நான் விட்டாலும் உங்கடை பின்னோட்டங்கள் விடவிடாது என்றும் நம்புறன்.

சிறுவயதில் வீரகேசரி, தினகரன், தினபதி, ஈழநாடு பத்திரிகைகளில் கடைசிப்பக்கம் அல்லது அதற்கு முதற்பக்கத்தில் சினிமா விளம்பரங்களை ஆவலோடு எதிர்பார்ப்பதில் ஆரம்பித்த பழக்கம், இன்று நான் எழுதுவதை மற்றவர்களும் பார்க்கவேண்டுமே என்று ஏங்க வைக்கின்றது வரை வளர்ந்திருக்கிறது.

அன்று தினமும் அங்கும் இங்குமென வாசிகசாலைகளுக்கிடையே சைக்கிள் உழக்கி அலைந்த காலம்போய், இன்று இருந்த இடத்திலேயே, வலைமனைகளுக்கும், வலைப்பூக்களுக்கும் நுழுந்தி, நுழுந்திப்போய் தரிப்பதுவும், சொடுக்குவதுமாய் கழிகின்றது. ஆனால் இந்த மினைக்கெட்ட தேடலில் உள்ள அதீதமான ஆர்வம் மட்டும் அன்றுமுதல் இன்றுவரை என்றுமே குறைவதாகத் தெரியவில்லை.

இதனிடையே வாழ்வும் சில புலங்கள் பெயர்ந்திருக்கின்றது. இந்த மாற்றங்களிடையே எனக்கேற்பட்ட இரசனைமிக்க அனுபவங்களைத்தான் உங்களுடன் சாதாரணனின் வலைப்பதிவுகளில் இன்று முதல், வலு மும்முரமாக பகிரப்போகின்றேன்.

சரி புதுவருசத்திற்கு வந்தநீங்கள் ஒரு தேத்தண்ணி குடிச்சுப்போட்டுப் போறியளே?

www.saatharanan.com-017a

 

நன்றி.

அன்புடன்
சாதாரணன்.

-நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-

கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்

கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்


மறைந்த அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் நினைவாக கோமாளிகள் திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோ பாடல் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

எனக்கொரு நண்பன் இருக்கிறான். அவன் எதிலை தீவிரமாக இருக்கிறானோ அதிலை அதீத, அதிதீவிரமாக இயங்குவான். ஏதோ எனக்குத் தெரிந்த வார்த்தைகளால் விபரிக்க முடிஞ்சது இவ்வளவுதான். உண்மையிலை அவன்ரை இயல்பு இதிலும்விட தீவிரமானது. அவனைப்பற்றி ஒரு முழுச் சொற்சித்திரம் விரைவில் வரைய எண்ணியிருப்பதால் விபரணத்தை இத்தோடை நிப்பாட்டுவம். சரி இனி விசயத்துக்கு வருவம்.

[caption id="attachment_334" align="aligncenter" width="480"]கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம் கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்[/caption]

அப்ப அவன் தீவிர சிவாஜி ரசிகனாயிருந்த நேரம். அதாவது அவன் அதீத, அதிதீவிர சிவாஜி இரசிகனாயிருந்த நேரம். ராணியிலை உத்தமன், ராஜாவிலை எங்கள் தங்க ராஜா, மனோஹராவிலை உனக்காக நான் என்று முதல்நாள், முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து என்னை பிடிச்சு வைச்சு இருத்தாத குறையாக கதை சொல்லுவான்.

எதிலையும் கொஞ்சம் நடுநிலமையாக இயங்குகின்ற நானும் ஒரு வீம்பாக முதல் நாள், முதல் ஷோ என்று பார்த்த முதற்படம்தான், யாழ்ப்பாணம் வின்ஸரில் வயிறு குலுங்கக் குலுங்க சிரிச்சு பார்த்த ஈழத்துத் திரைப்படம் கோமாளிகள். இதில் மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி எஸ்.செல்வசேகரன், ஐயர் அப்துல் ஹமீட் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்

கோமாளிகள் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி


நன்றி: பாலன் ஆர்ட்ஸ், Arul K, YouTube

அன்புடன்
சாதாரணன்.

 

 

 

 

 

Sunday, December 30, 2012

அதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் கும்மாளம் - சில நினைவுகள்

அதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் கும்மாளம் - சில நினைவுகள்


அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் மறைவினை முன்னிறுத்திச் சில நினைவுகள்

அப்ப யாழ்ப்பாணத்திலை டிவி இல்லை,மினிபஸ் கூட வராத காலம். இதிலை போனா சங்கடம் என்ற இ.போ.ச வசுவிலைபோய் யாழ்ப்பாணம் டவுனிலை படம் பாக்குறத்துக்குள்ளை தவிலறுந்போயிடும். தினசரிப் பொழுதுபோக்கிற்கு, றேடியொவே கதியென்று இருந்த காலகட்டம். அதுவும் கர், புர் சத்தத்தோடைதான் ஒலிக்கும்.

[caption id="attachment_227" align="aligncenter" width="300"]அமரர் உபாலி எஸ்.செல்வசேகரன் அமரர் உபாலி எஸ்.செல்வசேகரன்[/caption]

அந்த நேரத்திலை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின்னேரம் நாலு மணியிலையிருந்து நாலரை மணிவரை றேடியோவிலை கோமாளிகளின் கும்மாளம் என்ற இலங்கை மக்கள் வங்கியின் விளம்பர நிகழ்ச்சி மூலம் எங்களை குதூகலத்தில் ஆழ்த்தியவர்கள் தான் இந்தக்கோமாளிகள்.

நிகழ்ச்சி அத்தானே, அத்தானே என்று தொடங்கும் மக்கள் வங்கியின் விளம்பர டைட்டில் சோங்குடன் ஆரம்பிக்கும். பாட்டு அந்த நாட்களில் எங்களுக்கு மனப்பாடம்.

அதைத் தொடர்ந்து இலங்கை வானொலி அறிவிப்பாளர்களில் தனக்கென பிரத்தியேக குரலைக்கொண்டிருந்த கவிஞர் சில்லையூர் செல்வராஜனின்
"இதோ உங்களைக் குதூகலத்தில் ஆழ்த்த வருகிறார்கள் உங்கள் கோமாளிகள்" என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து வரும் கோமாளிகளான, மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி எஸ்.செல்வசேகரன், ஐயர் அப்துல் ஹமீட் என்று இவை நாலுபேரும் சேர்ந்து அடிக்கிற கூத்திலை சிரிச்சு, சிரிச்சு வயிறு புண்ணாப்போயிடும்.

இணப்புக்கள்

தமிழ் விக்கிபீடியாவில் இவரைப் பற்றிய தகவல்கள்.

http://ta.wikipedia.org/s/19hh

அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் பேட்டியோடு கூடியுள்ள தகவல்கள்.

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/11/?fn=f1004117&p=1

மரணங்கள் என்றுமே கவலையைத்தருவன. அதிலும் எங்களை கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர்களின் மரணங்கள் கூடிய சோகத்தையே தரும்.

அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அன்புடன்
சாதாரணன்.

Saturday, December 29, 2012

தகவற்சித்திரங்கள் Infographics

தகவற்சித்திரங்கள் Infographics


Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இப்பக்கத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன்.

தகவற்சித்திரம் - சிறுவிளக்கம்


பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம்.
இனி இன்றைய  தகவற்சித்திரத்தைப் பார்ப்போம்.

தகவற்சித்திரங்களை பற்றி விளக்கம் தரும் தகவற்சித்திரத்தை இன்று பார்ப்போம்.

தகவற்சித்திரங்களின் சரித்திரத்தைக் கூறும் தகவற்சித்திரம்.
[caption id="attachment_101" align="aligncenter" width="580"]தகவற்சித்திரங்கள் Infographics தகவற்சித்திரங்கள் Infographics[/caption]

Source : www.abccopywriting.com

Summary : Infographics is graphic visual representations of information, data or knowledge.

Friday, December 28, 2012

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்.

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்


நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா? உங்களுக்கு ஓர் நற்செய்தி!  உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர் நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.

[caption id="attachment_219" align="aligncenter" width="450"]வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள் வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்[/caption]

144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.

http://scienceray.com/biology/ecology/keep-the-air-clean-in-your-home/

http://www.utne.com/Environment/NASA-sanctioned-houseplants-purify-indoor-air.aspx

Tuesday, December 25, 2012

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!

எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!


 

Australian Christmas Greetings
அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.

 

ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்


ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலமாதலால், என்னதான் ஐரோப்பிய, ஆங்கில மரபுகளை உள்ளடக்கிய சில நடைமுறைகளான ட்டர்கி சிக்கன் (Turkey), பவ்லோவா டெசெர்ட் (Pavlova desert) உணவு வகைகளை கொண்டமைந்தாலும் , ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான பின்வளவு பார்பக்கியூ (Backyard BBQ), பீச் சேர்விங் (Beech Surfing) ஆகியவற்றோடு இணைந்து கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவது ஆஸ்திரேலிய மரபாகி விட்டது. பாடசாலைகளுக்கு நீண்ட கால கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகளின் சந்தோஷத்திற்க்கும் குறைவில்லை. மீதியை இந்த படங்கள் சொல்லும்.

[caption id="attachment_206" align="aligncenter" width="512"]Saatharan Blog - Australian Christmas ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்[/caption]

[caption id="attachment_214" align="aligncenter" width="512"]Saatharan Blog - Australian Christmas ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்[/caption]

மீண்டும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.அன்புடன் 
சாதாரணன்

Wednesday, December 12, 2012

ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி

ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி


இன்று ரஜினியின் அறுபத்து மூன்றாவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடுகின்றார்கள். இது 12-12-12 என்ற சிறப்பான நாளில் அமைவதும் எல்லோராலும் பெரிதாக பேசப்படுகின்றது. இதனை முன்னிட்டு ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியினையும், ரசிகர்களுக்கு அளித்த செய்தியினையும் இப்பதிவில் காணலாம்.

[caption id="attachment_159" align="aligncenter" width="160"]Rajini Tv Interview Rajini[/caption]

 

ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி


Tuesday, December 11, 2012

எனக்கு பிடிச்ச ரஜினி

எனக்கு பிடிச்ச ரஜினி


சமீபத்தில் ரஜினியின் அறுபத்து மூன்றாவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடினார்கள். இது 12-12-12 என்ற சிறப்பான நாளில் அமைந்ததும் எல்லோராலும் பெரிதாக பேசப்படுகின்றது.

[caption id="attachment_308" align="aligncenter" width="300"]எனக்கு பிடிச்ச ரஜினி எனக்கு பிடிச்ச ரஜினி[/caption]

 

இதனை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்களான பல பிரபலங்களின் பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அவைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

எனக்கு பிடிச்ச ரஜினி - லாரன்ஸ் (டான்ஸ் மாஸ்டர்)எனக்கு பிடிச்ச ரஜினி - சுரேஸ்கிர்ஸ்ணா (திரைப்பட இயக்குனர்)

Sunday, December 9, 2012

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:


 

எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.

[caption id="attachment_138" align="aligncenter" width="320"]ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக் ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்[/caption]

 

ஜோக்:

கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.

'நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.

வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: '... பூஜ்யம்!’

'அப்படியானால் நான் யார்?’  இது முதலாளியின் அடுத்த கேள்வி.

ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: 'பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

Saturday, October 6, 2012

25 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகம்

ஒன்றல்ல, இரண்டல்ல,இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தினமும் ஆஸ்திரேலியாவில் எல்லோரும் விருப்பத்துடன் குடும்பத் தொலைக்காட்சி நாடகமொன்றான Neighboursஐ இரசித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இது Ramsay Street என்ற புனைவுத் தெருவில் வசிக்கும் குடும்பங்களுக்குள் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நாடகமாகும். 1985 ஆம் ஆண்டுமுதல் கிழமை நாட்களில்
தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நாடகம் இரு வருடங்களுக்கு முன்னர் வெள்ளிவிழாக் கொண்டாடியது.

ஆரம்பகாலத்தில் சானல் 7இல் ஒளிபரப்பாகிய இந்நாடகம், பின்னர் சானல் 10இல் 1986 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி, தற்போது டிஜிட்டல் சானல் 11 இலும்  ஒளிபரப்பாகி வருகின்றது. அத்துடன் உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலும் ஒளிபரப்பாகிறது. ஆஸ்திரேலியாவின் இலாபகரமாக அதிகம் சம்பாதித்த ஊடக நிகழ்ச்சிகளில் Neighbours உம் ஒன்றாகும். உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான ஆஸ்திரேலிய பாடகி Kylie Minogue தன் கலைவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துக்கொண்டார்.

இணைப்புகள்
நாடகம் பற்றிய விபரங்கள்
http://en.wikipedia.org/wiki/Neighbours

நாடகத்தின் வலைப்பக்கம்
http://neighbours.com.au/

மழலைகளின் உணவில் அதிக கவனம் கட்டாயமாகத் தேவை

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான

கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மிகுந்த கவலையளிப்பதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளின்

உடல் நலத்திற்கேற்புடைய உணவுப் பதார்த்தங்களை அதிக அக்கறையுடன் கொடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றது.

இணைப்புக்கள்

சுருக்கமாக ஆய்வின் விபரங்கள்

http://www.laboratoryequipment.com/News-kids-fall-for-sugary-fatty-brands-012811.aspx

சில தீர்வுகள்

http://www.i-newswire.com/preschoolers-need-to-be-taught/86534

 

விமானத்தில் இலத்திரனியல் கருவிகளை செயற்படுத்துவது மிகவும் ஆபத்தானது

விமானத்தில் இலத்திரனியல் கருவிகளை செயற்படுத்துவது மிகவும் ஆபத்தானது


விமானப்பயணத்தின் ஆரம்பத்தில் இலத்திரனியல் கருவிகளின் செயற்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிடுமாறு விடுக்கப்படும் அறிவித்தலை பலரும் இது ஒரு வழக்கமான விஷயம்தானே என்று கவனதில் கொள்ளுவதேயில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த விசாரணையொன்று விமானப்பயணத்தின்போது பயணிகளின் இலத்திரனியல் கருவிகள் இடையூறுகளை உண்டாக்குவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.

மேலும் இது சில விமான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக 2003ஆம் ஆண்டு நியூஸிலாந்தில்  நிகழ்ந்த எட்டுபேரை பலிகொண்ட விமான விபத்திற்கு மோபைல்போன்  இனால் ஏற்பட்ட இடையூறுதான் காரணமென நம்பப்படுகிறது.

எனவே விமானப் பயணத்தின்போது இலத்திரனியல் கருவிகள் உபயோகிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள்.

இணைப்புக்கள்

http://www.nytimes.com/2011/01/18/business/18devices.html

http://www.heraldsun.com.au/ipad/high-tech-danger-in-the-air/story-fn6bfmgc-1225991279563

ஏன்னா நான் உன் நண்பேண்டா!!

ஏன்னா நான் உன் நண்பேண்டா!!


இது காலம் கடந்த உறவு ஏன்னா நான் உன் நண்பேண்டா!! என்று சில வேளைகளில் விளையாட்டாக்கூட சொல்வோமல்லவா?  இனிமேல் அதை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சிபூர்வமாகவே நீங்கள் சொல்லலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞான பூர்வமாக கூறுகின்றார்கள். ஏனென்று பார்ப்போமா?

விஞ்ஞானிகள் ஏன் உங்களுக்கு சிலரை பார்த்தமாத்திரத்திலேயே பிடித்து விடுகின்றது என்றால் உங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறது என்றும், அதேபோல் நீங்கள் கண்டமாத்திரதிலேயே வெறுப்பதிலும் வேறோரு குறிப்பிட்ட ஜீன் சம்பத்தபட்டிருக்கிறது என்கிறார்கள்.

இப்ப சொல்லுங்கோ உங்கள் நட்பு காலம் கடந்ததா இல்லையா?

இந்தப்பாடலைப் பார்த்துவிட்டுப் பின்னர் இணைப்புக்களில் விபரங்களைப் பாருங்களேன்.

இணைப்புக்கள்

http://www.bbc.co.uk/news/science-environment-12207954

http://news2.onlinenigeria.com/world/69652-Best-friends-forever-gene-Its-all-our-DNA-say-scientists.html

கல்லறையிலிருந்து கருவறைக்கு

கல்லறையிலிருந்து கருவறைக்கு


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரினம் ஒன்று உயிருடன் உங்கள் முன்னால் உலா வரப்போகின்றது என்றால் நம்பமுடிகின்றதா? தற்போது ஜப்பானில் நடந்து வரும் ஆராய்ச்சி வெற்றியளிக்குமாயின் இன்னும் ஐந்து வருடங்களில் நிகழப்போகும் நிதர்சனம் இது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டிக் காலத்தில் ரஸ்யாவின் சைபீரிய வெளிகளில் வாழ்ந்த ஒருவகை யானையினம் பூமியில் ஏற்பட்ட திடீர் வெப்ப உயர்வால் முற்றிலுமாக அழிந்தது. இந்த உயிரினத்தைதான் மீண்டும் அதன் DNA மூலக்கூறுகளிலிருந்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மமூத் எனப்படும் இந்த உயிரினத்தின் செல்களின் DNA மூலக்கூறுகளை யானையின் வெற்றுக் கருமுட்டையினுள் செலுத்திப் பின்னர் பரிசோதனைச்சாலையில் சிலநாட்களுக்கு கருவை வளர்த்தெடுத்து யானையின் கருப்பையினுள் வைப்பதன் மூலம் உருவாகும் குட்டி முழுமைபெற குறைந்தது 600 நாட்களாவது எடுக்கும்.

இணைப்புக்கள்.
http://theweek.com/article/index/211207/cloning-the-woolly-mammoth-a-worrying-precedent

பழைய செய்தியெனினும் விரிவாக ஆராய்ந்துள்ளது.
http://news.nationalgeographic.com/news/2005/04/0408_050408_woollymammoth.html

புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்

புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்


கோடம்பாக்கத்தின் செட்டுக்களுக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு வீரவசனங்கள் பேசிய நம்ம ஹீரோக்கள், மதுரையின் சந்துபொந்துகளுக்குள் சேவல்களுடன் கதை பேசுமளவுக்கு  இயக்குனர்களின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். புலத்திலும் தமிழ்படத்தின் சாயலிருந்து விலகி சொந்தக்கதையைப் பேசியிருக்கிறது 1999. (இது எனது சின்னச் சின்னச் செய்திகள் வலைப்பூவில் வந்ததொரு பதிவின் மீள்பதிவு.)

[caption id="attachment_325" align="aligncenter" width="450"]புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம் புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்[/caption]

தமிழ்ப்படத்தின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது மிகையல்ல உண்மை. ஹீரோக்கள் விம்பங்களை உடைத்து சாதாரணர்களாக இயக்குனர்களின் தயவில் வித்தியாசமான களங்களில் வாழத்தலைப்பட்டு விட்டார்கள். தொழில்நுட்பத்தினரும் சினிமாவின் எல்லாத் துறைகளிலும்  கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழ்படங்களுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் விருது என்பது ஆஸ்கார் உட்பட எட்டிய கனியாகிவிட்டது.

புலத்திலும் இதனை மெய்ப்பிக்கும் வண்ணம், சென்ற ஆண்டில் கனடாவில் வெளிவந்திருக்கும் படம்தான் 1999. இது பல உலகத் திரைப்பட விழாக்களிலும் பங்குகொண்டுள்ளதுடன் விருதுகளையும் பெற்றுள்ளது.

புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு ஒரு நல்ல ஆரம்பம் 1999.

 

இணைப்புக்கள்

1.படத்தின் உத்தியோகபூர்வ வலைமனை

http://www.1999movie.com/

2.இயக்குனரின் youtube பக்கம்

www.youtube.com/user/leninmsivam

3.இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர்களின் பேட்டிகள்

பகுதி1        பகுதி2        பகுதி3       பகுதி4         பகுதி5

4. படத்தின் கதைப் பின்னணியை உள்ளடக்கிய நல்லதொரு விமர்சனம்

புத்துயிர் பெறும் செய்மதித் தொடர்பு நிலையம்

1962இல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய செய்மதி தொடர்பு நிலையமாகவும் செயற்பட்டது Goonhilly Earth Station. இது 1969இல் சந்திரனில் மனிதன் காலடி வைத்த நேரத்திலும் முக்கிய பங்காற்றியது.  ஆனாலும் 2008இல் பெருமளவில் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டதுடன் ஏறக்குறைய மூடிவிடும் நிலையை எட்டியிருந்தது.

[caption id="attachment_81" align="aligncenter" width="404"]Saatharan Blog : Goonhilly Worlds Largest Satellite Earth Station Goonhilly Worlds Largest Satellite Earth Station[/caption]

இப்போது  ஒக்ஸ்போட் (Oxford) பல்கலைக்கழகம் உள்ளடங்கிய சில பிரித்தானிய, சர்வதேச விண்வெளி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் உருவான Goonhilly Earth Station Ltd. (GES) என்ற பெயரில் மீண்டும் புத்துயிர் பெற்று முழுவீச்சுடன் செயற்படவிருக்கின்றது.

முதற்கட்டமாக மனிதன் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் நிகழ்த்தவிருக்கும்  அடுத்தகட்ட விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகவிருப்பதுடன், வானொலி வானியலின் (Radio Astronomy) துணைகொண்டு அறியப்படாத விஞ்ஞானப் புதிர்களான dark energy, quantum gravity தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளப் போகின்றது. வளங்களை மீள உபயோகித்து மேலும் வளங்களை கண்டறிதல் என்றவகையிலும் முக்கியத்துவம் பெறும் இச்செயற்திட்டம் மனிதனின் தற்போதைய அறிவிற்கும் அப்பாற்பட்ட, உலக எல்லைகளை கடந்த விண்வெளியில் இதன் வீச்சம், எதிர்காலத்தில் பல சாதனைகளை நிச்சயமாக நிகழ்த்தும் என நாம் நம்பலாம்.

இணைப்புக்கள்

செய்தி தொடர்பான விளக்கமான விபரங்கள் இங்கும்

http://financial.tmcnet.com/news/2011/01/11/5237416.htm

செயற்பாடுகளை நிறுத்தியது பற்றிய செய்தி எனினும் அது கொண்டிருக்கும் செய்மதித்தொடர்பு வாங்கிகள் பற்றிய விபரங்கள் இங்குமுண்டு.

http://www.astroengine.com/2008/05/goonhilly-shutdown-of-the-worlds-largest-satellite-earth-station/

தாய்ப்பால் வங்கிகள்

சேமிப்பு வங்கி, முதலீட்டு வங்கி, கடன் வங்கிகளென கேள்விப்பட்ட நாங்கள் தாய்ப்பால் வங்கியைப்பற்றி அறிந்திருக்கிறோமா? கடந்த சில ஆண்டுகளாக இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்டு பலநாடுகளில் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மும்பையில் இயங்கி வருகின்றது. வேறு இடங்களிலும் இயங்குவது தெரிந்தால் சொல்லுங்கள்.

[caption id="attachment_84" align="aligncenter" width="396"]Saatharan Blog : The Mothers’ Milk Bank The Mothers’ Milk Bank[/caption]

"ஒரு பச்சிளம் குழந்தை தன் சொந்தத்தாயிடம் பாலை பெற்றுக் கொள்ளுவதில் சிரமங்கள் இருந்தால், மாற்றாக வெறொரு தாயிடமிருந்து பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது. இதற்கு உறுதியளிக்கும் விதத்தில், பாதுகாப்பான வழிமுறைகளையும், தொடர்ச்சியான வழங்கல்களையும் தன்னகத்தேகொண்டு, தாய்ப்பால் வங்கிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தாய்ப்பாலை வழங்குமெனில், அவை இதைச்  செய்யலாம்." என்ற உலக சுகாதார நிறுவனத்தினரின் பரிந்துரைக்கமைய தாய்ப்பால் வங்கிகள் உலகில் செயற்பட்டு வருகின்றன.

தாய்ப்பால் வங்கிகள், நடைமுறையில் இடதுக்கிடம் கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல், பதனிடுதல் போன்ற செயற்பாடுகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் பயன்பாட்டளவில் பெருவெற்றிகளை சாதித்து வருகின்றன. பின்னே! திடகாத்திரமான புதிய சந்ததியினரை உருவாக்கும் வங்கிகளல்லவா?

பின்வரும் இணைப்புக்களில் மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

http://www.nationalmilkbank.org/content.php?content_id=1002

http://mothersmilkbank.com.au/home/

http://www.breastfeedingindia.com/breastfeeding/human_milk_banks.html

http://www.ukamb.org/index.html

Friday, October 5, 2012

மேலும் சில ஆஸ்திரேலியப் பாடல்கள்!

நீங்கள் கேள்விப்பட்டீர்களோ தெரியாது. ஆஸ்திரேலியாவின் பிரபலமான இசைக்குழுக்களிலொன்று Mid Night Oil. இவர்கள் சுற்றுப்புறச் சூழலிலும், மனித உரிமை தொடர்பான விடயங்களிலும் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் பாடல்களும் அவற்றையே பிரதிபலிக்கின்றன.

Mid Night Oil இசைக்குழுவின் பிரதான பாடகர் Peter Garrett இன்று ஆட்சியிலிருக்கும்  தொழிற்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர். இசைக்குழுவிலிருந்தபோது காட்டிய துடிப்பை (அவர் ஆட்டத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்) அமைச்சராக செயற்படும்போது காட்டுவதேயில்லை என்ற காட்டமான விமர்சனமும் இவர்மீது உண்டு.

இனிப்பாடல்களைப் பாருங்களேன். பாடல் வரிகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

1. Blue Sky Mine. - Lyrics

2. Dead Heart - Lyrics


3. White Fella Black Fella - Lyrics

 

இணைப்புக்கள்.

http://www.midnightoil.com/

http://www.midnight-oil.info/

http://en.wikipedia.org/wiki/Midnight_Oil

http://en.wikipedia.org/wiki/Peter_Garrett

http://www.petergarrett.com.au/

Tuesday, October 2, 2012

ஆஸ்திரேலிய பாடல் காட்சிகள்

ஆஸ்திரேலிய பாடல் காட்சிகள்நான் வாழும் புலமான ஆஸ்திரேலியாவில் பிரபலமான சில பாடல் காட்சிகளை  இங்கு தந்துள்ளேன். முதலில் ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர் 
yutho yindi யின் பாடல்களில் பிரபல்யமானதொன்றைப் பாருங்களேன்.
 


 

ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின் You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன்.  இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.

 


 

மேலும் சில பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் தருகின்றேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.Monday, October 1, 2012

சமர்ப்பணம்!!

சமர்ப்பணம்!!


சின்ன வயதிலே பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டு இரவினிலே ஒழுங்கையினூடாகத் தனியாகத் திரும்பி வருகையில் பேய்க்குப் பயத்திலே கண்ணை மூடிக்கொண்டு ஓடிவருவதுண்டு.

ஆனாலும் பயத்தையும்மீறி இடையிலே கண்விழித்து பார்த்து,அந்த இருட்டினில் பன்னைப் பத்தைகளுக்கிடையே மினுங்கும் மின்மினிப்பூச்சிகளின் அழகினை இரசித்து மனம் இலயித்து நின்று விடும் என்னை பெடியனைக் காணவில்லையே என்று கூப்பிடும் குரல்தான் அசைக்கும்.

இந்த இரசனையின் தொடர்ச்சி எனது உடல், உள, வளர்ச்சிகளோடு சேர்ந்தும், சேராமலும் மாறுபட்டு வெண்திரை, சின்னதிரை என நீட்சிபெற்று இன்று கணணித்திரையில் கண்பதிக்க வைத்துவிட்டது.

அதிசயம் என்னவென்றால் இவ்வித இரசனைகளையும்,அதிலிருந்து வேறுபட்ட மற்ற ஊடகங்களின் இரசனைகளையும், கலந்து ஏக மொத்தமாக பல்லூடகக் கணணியிலே கண்டும், கேட்டும், கூடவே மற்றைய புலன்களின் உணர்வுகளோடும் பரிணமித்து இரசிக்க முடிகின்றது. என்ன கொஞ்சம் அக்கறையோடு தேடவேண்டும். இப்படிப்பட்ட தேடல்களை எனது உணர்வுகளுடன் கலந்து உங்களுடன் பகிருமொரு வலைப்பூவே இந்த சாதாரணனின் வலைப்பதிவுகள்.

[caption id="attachment_245" align="aligncenter" width="450"]விஞ்ஞானிகளுக்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம் விஞ்ஞானிகளுக்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம்[/caption]

அத்துடன் மின்சாரம், தொலைபேசி,வானொலி, சினிமா, தொலைக்காட்சி, கணணி, வலையம், வலைபூக்கள், மடிக்கணணி, செல்பேசி, குறுணி, உக்குறுணிக்கணணி ....... என தொடர்ச்சியாக விரிந்து கொண்டே செல்லும் இத்தொழில்நுட்பங்களை தங்களின் நேரத்தை பொருட்படுத்தாத கடின உழைப்பினூடாக, சாமான்யர்களுக்கும் எளிதாக பயன்படுத்தும்படி சாத்தியமாக்கிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் இவ்வலைப்பூ சமர்ப்பணம்.

அன்புடன்
சாதாரணன்.

 

நல்வரவிற்கு நன்றிகள் !!

வணக்கம் வலை நண்பர்களே!!

[caption id="attachment_5" align="aligncenter" width="300"]Saatharanan's website : My web sites with tamil blogs வணக்கம்[/caption]
உங்கள் நல்வரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

அன்புடன்

சாதாரணன்.