Wednesday, April 3, 2019

சினிமா இரசனையில் இயக்குனர் மகேந்திரன் பாலு மகேந்திரா உருவாக்கிய மாற்றம்

சினிமா இரசனையில் இயக்குனர் மகேந்திரன் பாலு மகேந்திரா உருவாக்கிய மாற்றம்

அமரர் இயக்குனர் மகேந்திரன்

சின்னவயதில் கொழும்பிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலுமென‌ சினிமாப் படங்களைத் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டாடிய ஆரம்ப காலங்களில் ஒரு சண்டைப்பிரியனாக எம்.ஜி.ஆர் இரசிகனாகவிருந்து, பின்னர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும் வேளைகளில் ஒரு தீவிர சிவாஜி இரசிகனின் கிண்டல்களில் இருந்து தப்பிக்க ஒரே இலகுவான வழி நடிப்புப்பிரியனாக மாறிவிடுவதுதான் என்று சிவாஜி இரசிகனாகவும் மாறிவிட்டேன்.

ஆனால் நாங்களும் வளர, தொழில்நுட்பமும் வளர்ந்தபோது தியேட்டர்களில் பார்த்த சினிமாவை, வீடியோப் படக்காட்சிகளென அளவெட்டி, சுற்றுவட்ட கிராமங்களின் மூலைமுடுக்குகள் எங்கிலும் மூன்று ரூபாய்க்கு இரண்டு படங்களென மலிவுவிலையில் பார்த்தவேளைகளில், கறுப்பு வெள்ளை இரஜினியின் ஸ்டைல் இரசிகனாக மாறியிருந்தேன்.

இப்படிச் சகட்டுமேனிக்கு அளவெட்டியிலும், சுற்றுவட்ட கிராமங்களிலும் வீடியோ படக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்த தருணத்தில் எங்கள் பால்ய நண்பன், ரீக்கடைக்கார மாரிமுத்தண்ணையின் பேரன் பிரபா, அளவெட்டி ஐயனார் கோவிலுக்கு பக்கத்து வளவில் காட்டவெளிக்கிட்ட படம்தான் 'முள்ளும் மலரும்'. அன்று பின்னேரம் லவுட்ஸ்பீக்கரில் ஊரைச் சுற்றி எனௌன்ஸ் பண்ணிவிட்டு, படம் காட்டவிருந்த இடத்திலிருந்து லவுட்ஸ்பீக்கரில் பாட்டுப்போட்டு எங்களை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான். சனமும் அவனின் அழைப்பிற்கு குறைவைக்காமல் வீடியோவில் இரஜினியின் புதுப்படமொன்று பாக்கப்போற‌ புளுகத்திலை எக்கச்சக்கமாக‌ கூடியிருந்தது.

ஆனால் படம் தொடங்கவிருந்த இறுதித் தருணத்தில், வீடியோப் படக்காட்சிகளுக்கு எதிராக‌ இயங்கிய கோஷ்டியொன்று கரண்ட் கம்பிகளுக்கு,  சைக்கிள் செயினை எறிந்து கரண்டைக் கட் பண்ணிவிட்டார்கள். சனமும் 'சரி, அப்ப குடுத்த காசுக்கு அரோகராத்தான்' என்று கவலைப்பட்டு, அரசல் புரசலாக கதைவழிப்பட‌த் தொடங்கியிட்டுது.

ஆனால் எதற்குமே சளையாமல் எங்கடை பால்யநண்பன் பிரபா சரியா உணர்ச்சி வசப்பட்டு, குரல் தளதளக்க‌ "ஒருத்தரும் ஒண்டுக்கும் கவலைப் படாதையுங்கோ, வீட்டையும் போகாதையுங்கோ இண்டைக்கு எப்படியும் உங்களுக்கு நான் படம் காட்டாமல் விடமாட்டன்" என்று கத்திச் சொல்லிவிட்டு அயல் கிராமமான மல்லாகத்திற்குப் போய் மாட்டுவண்டியில் லைற் எஞ்சின் பிடிச்சுக்கொண்டு வந்து, சொன்னமாதிரியே நள்ளிரவில் எங்களுக்கு தன் கைக்காசில் நஷ்டப்பட்டு, விடாப்பிடியாக‌ காட்டிய படம்தான் "முள்ளும் மலரும்".  படம் முடியேக்கை விடியத்தொடங்கியிருந்தது.  அதுபோல எங்கள் இரண்டு, மூன்று மணிநேரக் காத்திருப்பும் வீண்போகாமல் "முள்ளும் மலரும்" தமிழில் ஒரு நல்ல சினிமாவை அடையாளம் காட்டி எங்கள் இரசனையிலும் ஒரு விடியலை ஏற்படுத்தியது. நன்றி பிரபா.

அடுத்தநாள் வாசிகசாலையில், "எடேய் படத்திலை கதை நல்லம், நடிப்பு நல்லம், எல்லாத்தையும் விட பாட்டுக்கள் வித்தியாசமாகவிருந்தது கவனிச்சனிங்களோ அதிலும் 'செந்தாழம் பூவே" சுப்பரடாப்பா" கமெரா சோக்காயிருந்தது, கதை சொன்ன டெக்னிக்  எப்படியடா? இப்படி? என்ற எங்கள் கத்துக்குட்டித்தனமான விமர்சனங்களுக்கூடான வினாக்களுக்கு ஆனந்தவிகடனின் விளக்கமான விமர்சனம் விடையளித்து எங்கள் இரசனையை மேலும் மெருகூட்டி வளர்த்தது. இப்படித்தான் நாங்கள் மகேந்திரனின் டைரக்க்ஷனுக்கும், பாலு மகேந்திராவின் கமெராவுக்கும் இரசிகர்களாகி மொத்தத்தில் நல்ல சினிமாக்களை இரசிக்கத் தொடங்கினோம்.

அமரர் இயக்குனர் மகேந்திரன் மறைந்தாலும் அவர் எங்கள் சினிமா இரசனையில் உருவாக்கிய மாற்றம் அவரை என்றென்றும் எங்கள் நினைவில் வைத்திருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

அன்புடன்
சாதாரணன்.

பிற்குறிப்பு: இப்பதிவு 2014 பெப்பிரவரியில் அமரர் பாலு மகேந்திராவின் மறைவின்போது எழுதிப் பதிவிடப்பட்டது. பதிவின் பொதுமை கருதி இன்று சிறிய திருத்தங்களுடன் மீள்பதிவிட்டுள்ளேன்.