Friday, January 11, 2013

மிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர்

டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!!

[caption id="attachment_339" align="aligncenter" width="480"]மிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர் மிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர்[/caption]

அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே?

இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டிலை நேரா விடு தம்பி, வந்திட்டம், இனிக் கேட்டுத்தானே ஆகவேண்டும். எண்டும் சொல்லுவியள்.

அதென்னெண்டால், சும்மா ஊரிலை நல்ல சாவதானமாக தோட்ட வரம்புகளிலை, வழுக்கி விடாமல் மெல்ல நடை போட்ட எங்களைக் கொண்டு வந்து fப்றிவேயிலை விரைந்து போகவிட்டுட்டுது வாழ்க்கை. ஆனால் பாருங்கோ என்னதான் வசதிகள் இருந்தாலும் தினமும் எங்கடை கனவிலும், நனவிலும் ஊர் நினைவுதானே வந்து துலையுது. அதைத்தான் மிச்சச்சொச்சத்திலை நானும் ஒரு பிடி பிடிப்பம் எண்டு நினைக்கிறன்.

என்னதான் சுத்தி வளைச்சு சொன்னாலும் இது ஒரு நனவிடை தோய்தல் உத்தியில், சொல்லப்படப்போகின்ற தொடர் என்பதைப் பலரும் புரிந்துகொண்டிருப்பீர்கள். (என்ன தம்பி, இப்ப வண்டில் நேரா வந்திட்டுது போலை கிடக்குது! சரி சரி சொல்லடாப்பா!). ஆனா இப்பிடிக் கனக்கப்பேர் எழுதியிட்டினம், புலம் பெயர்ந்த சூழலில் எனக்குத் தெரிந்தவரையில், இதிலை வலுவிண்ணனான எங்கடை எஸ்.பொ விலை தொடங்கி, அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி, அ.ரவி, சயந்தன், வலையுலகில் கானாப்பிரபா, கே. எஸ். சுதாகர், ஜேகே, மற்றும் பலரென எல்லாரும் ஒரு கரை கண்டுட்டினம். இன்னும் சொல்லினம்.

இதுக்குள்ளை நான் என்னத்தை புதிசாச் சொல்லப்போறன் என்ற சங்கடத்துடனும், எண்டாலும் அவை எழுதினதின்ரை மிச்சத்தையும், சொல்லாமால் விட்ட சொச்சத்தையும் சொல்லலாமெண்ட தைரியத்தோடையும், எனக்குரித்தான தனித்த அனுபவங்களை இங்கை மிச்சச்சொச்சத்திலை நானும் உங்களோடை பங்கிட விரும்புகின்றேன். எதையும் வடிவாச் சொன்னால் கேக்கிற‌ உங்கடை பொச்சத்தை நானும் கொஞ்சம் தீர்ப்பனெண்ட நம்பிக்கையோடை உங்களை நம்பித் தொடங்கிறன். கைவிட்டுடாதையுங்கோ. அத்தோடை குறை, நிறைகளை பின்னூட்டத்திலை சொல்லவும் மறந்திடாதையுங்கோ.

"எல்லாம் சரி தம்பி, டிரெய்லர் காட்டினது காணும். எப்படாப்பா மெய்ன் பிக்சரைப் போடப்போறாய் தம்பி?"

அண்ணை கொஞ்சம் பொறுங்கோ, நாளை முதல்.......

உங்களன்போடை,

சாதாரணன்.

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்- 

No comments:

Post a Comment