Monday, January 14, 2013

மிச்சச்சொச்சம் - பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம்

பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம்


றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோவை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம் அல்லது கண்டிருக்கலாம். அந்த நாட்களில் கொழும்பில் அனேகமான வீடுகளில் கனெக்ஷ்சன் கொடுத்திருந்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அது இருக்கவில்லை. எனக்கு அது பிரச்சனையாகவும் இல்லை. என்னை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியும் புஷ்பா அக்கா வீட்டில் றெடிவிஷன் இருந்தது. இந்த ஊடகம் தொடர்பாக பலரையும் திக்குமுக்காட வைக்கும் மட்டற்ற பல கேள்விகள் பாலகனான என்னிடம் அன்று இருந்தன. அதற்கு வரமுதல் றெடிவிஷனைப் பற்றிக் கொஞ்சம் அறிவோம்.

[caption id="attachment_371" align="aligncenter" width="488"]www.saatharanan.com-022- இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ[/caption]

இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ. முதற் படத்தில் காட்டியவாறு நல்ல பவுத்திரமான இடத்தில் உயரே வைக்கப்பட்டிருக்கும். றெடிவிஷனில் தனியே றேடியோ சிலோன் அலைவரிசைகளை மட்டும்தான் கேட்கமுடியும். இரண்டாவது படத்தில் காட்டியவாறு பக்கவாட்டில் தெரிகின்ற‌ சுவிச்சின் ஒவ்வொரு முடுக்கிற்கும், தமிழ், சிங்கள, ஆங்கில அலைவரிசையென மாற்றி, மாற்றி கேட்கமுடியும். கேபிளினூடாக ஒலி அலைகளை றெடிவிஷன் பெறுவதால் நல்ல கிளியராக கேட்கக் கூடியதாகவிருக்கும். சாதாரண றேடியோ மாதிரி கரகரக்காது.

தமிழ் அலைவரிசையில் காலையில் கொஞ்சநேரம் தேசியசேவை, பின்னர் வர்த்தகசேவை. பத்து மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு மணிவரை ஒன்றுமேயில்லை. அதன்பின் இரண்டுவரை வர்த்தகசேவை. திரும்பவும் நாலுமணிவரை ஒன்றுமில்லை. அடுத்து ஆறுவரை வர்த்தகம். பின்னர் பத்துவரை தேசியசேவை. அத்தோடை சரி. அந்நாட்களில் எனக்குப் பிடிச்ச படப்பாட்டு சித்தி படத்தில் இடம்பெற்ற 'சந்திப்போமா, இன்று சந்திப்போமா' .

இனி என்ரை கேள்விகளுக்கு வருவோம். புஷ்பா அக்காவுக்கு அறிவு போதாததாலை அவாவின்ரை அம்மா, இராசாத்தி அன்ரிதான் என்ரை கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பா. அன்ரியை பற்றிச் சொல்லுறதெண்டால் என்றுமே நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன், அவரின் பருமனுக்கேற்றவாறு அரக்கி, அரக்கி திரிந்துதான் வேலைகளைச் செய்வார். கூடவே என் துடுக்கான கேள்விகளுக்குப் பதில்களும் வரும்.

உவை எங்கையிருந்து பாட்டுப்படிக்கினம்?
அந்தப் பெட்டிக்குளையிருந்துதான் பாட்டுப்படிக்கினம்.

எப்பிடி அதுக்குள்ளையிருக்கினம்? சரியான சின்ன ஆக்களே!
இல்லை. பெரிய ஆக்கள்தான். ஆனா அவைக்கு மந்திர, தந்திரமெல்லாம் தெரியும்.

இப்ப எங்கை றேடியோக்காரர் போட்டினம்?
அவை இப்ப சாப்பிடப்போட்டினம்.

இனி எப்ப திரும்ப வருவினம்?
சின்ன முள்ளும், பெரிய முள்ளும் சேர்ந்து, சரிநேரா மேலைபோகேக்கை வருவினம்.

வந்து "சந்திப்போமா" படிப்பினமே?
ஓமோம் படிப்பினம். அச்சாப்பிள்ளையெல்லே சாப்பிட்டு படுங்கோ.

அப்போதை சந்தோஷமாப் படிச்சவை, ஏனிப்ப அழுதழுது படிக்கினம்?
ஆரோ அடிச்சுப்போட்டினம் போலைகிடக்குது.

இனிச் சந்தோஷமாப் படிக்கமாட்டினமே?
அடிச்ச ஆக்களோடை உறவாகியிட்டு, சந்தோஷமா நாளைக்குப் படிப்பினம்.

திரும்ப எங்கை றேடியோக்காரர் போட்டினம்?
அவை இப்ப தேத்தண்ணி குடிக்கப் போயிட்டினம். கொஞ்ச நேரத்தாலை திரும்ப வருவினம்.

இவ்வாறு, அந்நாட்களில் என் முதல் ஊடகத்துடனுடான சகவாசம், என்ரை கேள்விகளுக்கு பதில் சொல்லிக் களைச்சுப்போகும் இராசத்தி அன்ரியின் துணையுடன் பப்படத் தோட்டத்தில் கழிந்தது.

அன்று றெடிவிஷனில் தொடங்கி, நாடகம், சினிமா, பேப்பர், கதைப்புத்தகம், சஞ்சிகைகள், கமெரா, ரிவி, வீடியோ, மற்றும் இன்றைய பல்வகைக் கணினிகளென பல்லூடகங்களோடும், தற்போதைய வலைப்பூ, முகனூல், யூடியுப், ட்விட்டர், கூகிள்பிளஸ், இன்னும் வருமென தொடர்ந்த வண்ணமேயிருக்கும் இன்னோரன்ன சமூக ஊடகங்களோடும், அவை காட்டும் மாஜிக்கோடு ஒன்றிணைந்து இரசித்தவண்ணம் இடையறாது சஞ்சரிக்க, அடாது வினாத்தொடுத்த இந்தப் பாலகனின் லாஜிக்கோடு முற்றிலும் பொருந்திவர சலியாது, அன்று பதிலளித்த இராசத்தி அன்ரிதான் காரணமென்றால், அதில் சற்றும் மிகையில்லை.

சத்தியமா, நான் இராசாத்தி அன்ரிக்கும் இவ்வலைப்பூவைச் சமர்ப்பணம் செய்திருக்கவேணும். மறந்திருக்கவே கூடாது. இராசாத்தி அன்ரி இவ்வலைப்பூ உங்களிற்கும் சமர்ப்பணம்!!

அன்புடன்
சாதாரணன்

பி.கு: மிச்சச்சொச்சத்திற்கு ஒரு சிறிய இடைவேளை (நாலைந்து நாட்கள்தான்). அதுவரை மற்றப்பதிவுகள் தொடரும். மறக்காமல் காணத்தவறாதீர்கள்.

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-


 

3 comments:

 1. அப்போதை சந்தோஷமாப் படிச்சவை, ஏனிப்ப அழுதழுது படிக்கினம்?
  ஆரோ அடிச்சுப்போட்டினம் போலைகிடக்குது.  இங்கை நிக்கிறியள் ஓடினறி :D உந்த றேடியோவை ஆகப்பொடிசாய் இருக்கேக்கை கண்ட ஞாபகம் கிடக்கு . எங்களுக்கு அப்பவேலை உந்த பட்டினுகளை அமத்தி விழையாடிறது . அதுசரி உந்த படத்தை எங்கை தேடிப்பிடிச்சியள் :lol: ??

  ReplyDelete
 2. [...] சந்திப்போமா, இன்று சந்திப்போமா : எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து பிடிச்ச முதற் படப்பாட்டே சித்தி படத்தில் இடம்பெற்ற ‘சந்திப்போமா, இன்று சந்திப்போமா’ பாடல்தான்.  இப்பாடலைப் பாடியவர் அமரர் P.B ஸ்ரீநிவாஸ். அல்லும் பகலும் இப்பாடலை றேடியோவில் இப்பாடலை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். இதுபற்றி முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன். [...]

  ReplyDelete
 3. [...] சந்திப்போமா, இன்று சந்திப்போமா : எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து பிடிச்ச முதற் படப்பாட்டே சித்தி படத்தில் இடம்பெற்ற ‘சந்திப்போமா, இன்று சந்திப்போமா’ பாடல்தான்.  இப்பாடலைப் பாடியவர் அமரர் P.B ஸ்ரீநிவாஸ். அல்லும் பகலும் இப்பாடலை றேடியோவில் இப்பாடலை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். இதுபற்றி முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன். [...]

  ReplyDelete