Tuesday, October 7, 2014

அனாதை - எனது முதற் சிறுகதை

அனாதை - இது எனது முதற் சிறுகதை. Australia வில் வெளிவந்து கொண்டிருந்த மரபு என்கின்ற தமிழ் சிற்றிதழில் எனது மற்றுமோர் புனைபெயரில் வெளியாகியது. நன்றி - மரபு Australia

அனாதை


அப்பாவின் உருவம் மெலிதாய் தெரிந்த நாட்களில் நாங்கள் நானுஓயாவில் இருந்தோம். எப்போதும் மழை வரப்போவது போலிருக்கும் வானம், பசுமை தெரியும் தேயிலைச் செடிகள், சுடுதண்ணிக் குளியல் இவைதான் இப்போதும் எனக்கு நானுஓயாவின் அடையாளங்கள். தேயிலைச் செடிகளுக்குள் ஒளிந்து விளையாடுவது எனக்குப் பிடித்திருந்தது. கண்ணுச்சாமி எனக்குத் தோழன்.

அனாதை - எனது முதற் சிறுகதை www.saatharanan.com-051

"கண்ணுச்சாமியுடன் விளையாடப் போகாதே" என்று அப்பா அதட்டுவார்.

அதட்டலின் காரணம் அப்போ எனக்குப் புரியாததால் "ஏன்?" என்றேன் நான்.

பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கையை உபயோகிப்பது அப்பாவின் வழக்கம். அம்மாவிடம் ஓடுவது என் வழக்கமாயிருந்தது.

"அட்டை கடிக்கும்" என்றாள் அம்மா.

இரத்தம் உறிஞ்சும் அட்டை நினைவில் வந்தது. பொய் சரியெனப்பட்டது இப்போது புரிகிறது. அப்பாவிடம் பயம். அம்மாவின் செல்லம். நான் கடைசிப்பெடியன்.

பள்ளி விடுமுறைகள் சந்தோசமாய்க் கழியும். ரயிலில் வந்திறங்கும் அண்ணைகளும், அக்காக்களும் பெட்டி முழுவதும் சந்தோசமாய் வந்திறங்குவார்கள். விதம் விதமாய்ச் சாப்பாடு, பலவிதமான ஊர்க்கதைகள் நானுஓயா தியேட்டரில் படங்கள் என நல்ல சந்தோசமாய்க் கழியும் நாட்கள், மீண்டும் நானுஓயா புகைவண்டி நிலையத்தில் கண்ணீர் திரையிட வழியனுப்பும் அம்மாவின் ஏக்கப் பெருமூச்சுடன் நிறைவுறும்.

"அப்பாவின் பள்ளிகூடத்தில் படிக்கலாம்தானே. ஏன் ரயிலேறி தூரப் போகிறார்கள்?" என்ற என் கேள்விக்குப் பதில் எல்லோருடைய சிரிப்புத்தான். நானும் ஒருநாள் ரயிலேற எல்லாம் புரிந்தது.

மலையகத்தில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டிய அப்பா தன் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் நல்ல பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு உதவிட சித்தப்பாக்களும், மாமாக்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.

பெரியக்கா வயதுக்குவர அம்மாவும் எங்களுடன் தங்கிவிட்டாள். விடுமுறைகளில் அப்பா ரயிலில் வந்து போனார். வந்து போனவர் இளைப்பாறி நிரந்தரமாய் எங்களுடன் தங்கினார்.

அப்பாவின் எதிர்பார்ப்புகளை சிரமேற்கொண்ட பெரியண்ணையும் பேராதனை நோக்கி தன் காலடியை எடுத்து வைத்தான். அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழியே என்று மற்றவர்களும் பேராதனை, கொழும்பு எனப் பிரிந்து போனார்கள். சின்னக்காவிற்கு மட்டும் குசினி நன்கு பிடித்தது. கோலங்கள் விதம் விதமாய் போடப் பழகினாள். இரசித்துப் பார்ப்பதற்கு வீட்டில் நான் இருந்தேன்.

வீட்டில் இல்லாத வேளைகளில் சினேகிதர்களுடன் ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய சினேகிதர்களை அப்பாவிற்குப் பிடிப்பதில்லை. எனக்கு அப்பாவின் புத்திமதிகள் பிடிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நானும் அப்பாவும் முரண்படத் தொடங்கினோம். எனக்கும் அப்பாவிற்குமென இருந்த ஒரே சைக்கிள் முரண்பாடுகளுக்கு எண்ணை வார்த்தது. எனக்கு 'ரியூசன்' இருந்த வேளைகளில் அது அப்பாவுடன் வாசிகசாலைகளிலும், அப்பாவிற்கு அவசர வேலைகள் இருந்தபோது அது என்னுடன் ஒழுங்கைகளில் ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தது. இரவுச் சாப்பாட்டின்போது காரண, காரியத் தொடர்புகள் ஆராயப்பட்டபோது அழுகைகள், ஆவேசப் பேச்சுக்கள், சபதங்கள் எனக்கிளம்பி அம்மாவின் மத்தியஸ்தத்தினால் சமநிலைக்கு வருவதுமாயிருந்தது. (உண்மையில் அது என்பக்கம் சார்பாயிருந்தது.)

எனக்கு அப்பாவைப் பிடித்த நேரங்களுமிருந்தன. அப்பா குடிப்பதில்லை என்ற பெயர் ஊரில் இருந்தது. கொஞ்சம் குடித்தாலே வெறித்துவிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஒற்றைப் பனைக் கள்ளு உடம்புக்கு தெம்பு என்ற சூத்திரம் அவருக்குப் பாதுகாப்பாயிருந்தது. ஏதாவதொரு சனியில் பகல் பத்து மணியளவில் குடிப்பார். இல்லை அருந்துவார். கொஞ்சமாய் கிக் ஏற உளறத் தொடங்குவார்.

"டேய் என்னுடைய அம்மா அப்பம் சுட்டு வித்து என்னைப் படிப்பித்தா, நீங்கள் என்னடாவெண்டால்...." என்று பழைய சரிதங்கள், ஏமாற்றங்கள், கதைகள் தொடர்ந்து வரும். இந்தவேளைகளில் எனக்கு அப்பாவைப் பிடித்திருந்தது. இரசிக்கவும் முடிந்தது.

பேராதனையும் அண்ணையை ஒரு Engineer ஆக உருவாக்கியது. மகாவலி Project அவருக்கு வேலை கொடுத்தது. நான்கு வருடங்கள் நாட்டிற்குப் பணியாற்றிவிட்டு கட்டுநாயக்காவில் விமானமேறினான். கொழும்பு உருவாக்கிய Doctorஉம் கட்டுநாயக்காவில்தான் விமானமேறினான். இப்போது எங்களிற்கு பணம் பலரூபங்களில் வந்தது.  அவற்றின் பெருக்கற் காரணிகள் அப்பாவிற்கு சந்தோசம் தந்தது. ஆனால் அவர் வெளிக்காட்டவில்லை. நாங்கள் புதிதாகக் கட்டிய வீடு எல்லாவற்றையும் பறை சாற்றியது.

ஊரில் செத்தவீடுகளிலும், கல்யாணவீடுகளிலும் அப்பா முக்கிய நபரானார். நல்லதொரு கதிரை அவருக்காகக் காத்திருந்தது, அல்லது மற்றவர்களினால் எழுந்து தரப்பட்டது. பின்னையது அப்பாவிற்குப் பிடித்திருந்தது. சின்னத்தலையாட்டல் அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகள் இவை அப்பாவினால் மற்றவர்களுக்குத் தரப்படும் மரியாதை. முக்கியமான விவாதங்களில் அப்பா ஒன்றிரண்டு கருத்துக்கள் உதிர்க்கலானார். உதிர்த்தவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்குப் பெண்பிள்ளைகள் இருந்தனர், அல்லது பணம் தேவைப்பட்டது. எங்கள் வீட்டுப் பணத்திற்கு குட்டியும் போடத் தெரிந்திருந்தது.

அண்ணர்மார் திரும்பிவந்து தங்களுடன் இன்னும் இருவரையும் கூட்டிச் சென்றனர். இப்போது எங்களிற்கு சுற்றம் கூடிவிட்டது. பெரியக்காவும் ஒரு Engineerஐ அல்லது Doctorஐத்தான் மணமுடிக்கலாம் என்றளவிற்கு படித்து முடித்துவிட்டு பிள்ளைகளுக்குப் படிபித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் பெரியண்ணை மாப்பிள்ளை பார்த்திருந்தார். (அண்ணி என்று சொன்னால் அடிக்க வருவான்.) அவளும் இராமனிருக்கும் இடம் பறந்து சென்றாள். சின்னக்காவின் செவ்வாய்தோஷம் அவளின் திருமணத்தைப் பின்போட்டது. 'தங்கமான மாப்பிள்ளை' ஒன்று அவளுக்குக் கிடைத்தது அவள் அதிஷ்டம். ஆனால் அவர் பசுத்தோல் போர்த்தியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது. சின்னண்ணை லண்டனில் நல்ல கடிவாளம் போடலாம் எனத் தன்னுடன் சின்னக்கா, அத்தானை அழைத்துவிட்டான்.

இப்போது ஊரில் நான், அப்பா, அம்மா மீதமிருந்தோம். என்னுடைய ஊர்சுற்றல்கள் Result sheetஇல் வேறு வடிவத்தில் வந்திருந்தது. என்னுடைய சகோதரங்களும் இனியும் என்னை அங்கு விட்டால் பிழை என்று தங்களுடன் அழைக்கத் தலைப்பட்டனர். நான் அப்பா, அம்மாவிற்கு உதவி தேவையென்று அங்கேயே இருக்கத் தலைப்பட்டேன். அம்மா இதற்குத் துணை நின்றாள். இதற்குப் பின்னால் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பதுதான் உண்மை. அம்மாவிற்கு இது தெரிய வந்தபோது அம்மாவே முன்னின்று "நீயும் போய்ச் சேர் ராசா" என்று அனுப்பி வைத்தாள்.

பல வெளிநாடுகளும் சுற்றி வந்து தன்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற காலநிலை கொண்ட நாடு Australiaதான் என்று வந்துவிட்ட பெரியண்ணை இங்கு என்னை அழைத்துவிட்டான்.

நானும் வந்தது முதல் படிப்பதும் வேலை செய்வதுமாயிருந்து முழுநேரவேலை செய்யத் தொடங்கி அப்பாவையும் அம்மாவையும் அழைத்தபோது, "உந்தக் குளிருக்குள்ளை நாங்கள் வந்து என்ன செய்யிறது." என்று அப்பா எழுதினார். வீடுகள் வளவுகளைப் பார்ப்பதற்கும் ஆளில்லை என்றார். உண்மைதான் நாங்கள் அனுப்பிய பணத்தை அப்பா ஒரு வலைபோல ஊரில் பரவிப்போட்டிருந்தார். அதில் பல சிக்கலான முடிச்சுக்கள் இருந்தன். முடிச்சுக்களை அப்பாவினாற்தான் அவிழ்க்க முடியும், அவிழ்க்காமல் அப்பாவால் வரவும் முடியாது. அம்மாவும் அயோத்தியை விட்டு வரமாட்டாள் என்று தெரிஞ்சு அமைதியானேன்.

*                     *                     *                       *                      *                      *                        *                        *

இன்று காலை ஒரு Telephone Callஇல் அப்பாவின் மரணம் செய்தியாக வந்தது. பெரியக்கா அழுதுகொண்டே செய்தி சொன்னாள். என்ன செய்வது இப்படிப் போய்விட்டாரே என்று குளறி அழுதாள். ஒரு கட்டத்தில் வரப்போகும் Telephone Bill அவளது அழுகையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பின் அத்தான் பேசினார். அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். கவலைப்படாதே என்று சொன்னார். அண்ணைக்குப் பக்குவமாய் செய்தி சொல்லச் சொன்னார். ஆங்கிலத்தில் ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வைத்தார்.

அண்ணையிடம் போய் நேரம் பார்த்து சேதி சொன்னேன். கண்ணைமூடி அமைதியாய் இருந்தார். உடம்பு மட்டும் இலேசாகக் குலுங்கியது. அண்ணி அழுதாள். "பேரப்பிள்ளைகளைக் கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்று சொல்லியழுதாள். பின் தேநீர் தந்து ஆறுதல் சொன்னாள். குடித்துவிட்டு வந்தேன்.

வீடு வந்து கட்டிலில் படுத்திருந்தேன். சின்னக்கா Phone பண்ணினாள். சத்தியமாய் அழுதாள். என்னை, அப்பாவை, தன்னை எல்லாம் நினைத்து கதைகள் பல சொல்லியழுதாள். "நீயாவது அவையளோடை கடைசிவரைக்கும் இருந்திருக்கலாம்தானே" என்றாள். நான் அமைதியாய் எல்லாம் கேட்டேன். பின் தானே தன் பிழையுணர்ந்து "நீ அவளைக் கூப்பிடு; நான் உனக்கு Support" என்றாள். சரி பார்க்கலாம் என்றேன்.

அவளுக்கு நான் தான் Telephone Billஐ ஞாபகமூட்டினேன். பின்பும் ஏதோ எல்லாம் கூறியழுதாள். தான் என்னைக் கவலைப்படுத்துவதை உணர்ந்தபோது, பின்னர் Phone பண்ணுவதாய் கூறிவைத்தாள்.

யாழ்ப்பாணம் போவது பற்றி யாரும் நினைக்கவுமில்லை. பேசவும் இல்லை. அந்தளவிற்கு அங்கு பிரச்சனைகள் இருந்தன.

தூரத்தே தீயணைப்பு வண்டியொன்றின் சங்கொலி கேட்டது. அப்பாவிற்கு யார் கொள்ளி வைத்திருப்பார்கள் என்று நினைத்தபோது அழுகை வருவது போலிருந்தது. அழவேண்டும் போலவும் இருந்தது. மெல்லமாய் போய்  Shower ஐத் திறந்துவிட்டு தண்ணீரில் நின்றபடி அழத்தொடங்கினேன்.

 

மரபு
புரட்டாதி - ஐப்பசி
1991

No comments:

Post a Comment