அதிபரின் வருகை
எழுபதுகளின் நடுப்பகுதி. அந்த நாட்களில் மகாஜனாவிற்கு அதிபர்கள் வருவதும் போவதுமாயிருந்த காலம். மகாஜனா எல்லாவற்றிலுமே சோர்ந்திருந்தது. உதைபந்தாட்டத்தில் மட்டும் அது நடக்காது என்று நிலைநாட்டிக் கொண்டிருந்த காலம்.
நாங்களும் அதற்கேற்ப, மதியஉணவு நேரம் சாப்பிட்டதுபாதி சாப்பிடாததுபாதி என நாங்கள் எல்லோரும் நாற்சாரவீட்டின் நடுவே அமைந்த வெளிபோல சுற்றிவர வகுப்பறைகள் சூழவுள்ள, மகாஜனாவிற்கு மட்டுமே சிறப்பாக அமைந்த எங்கள் விளையாட்டு மைதானத்தில் இறங்கிவிடுவோம் ஆளாளுக்கு ஐந்து, பத்துசதமென போட்டுச் சேர்த்த காசில், வகுப்புக்கோர் பந்தென கண்ணப்பர் கடையிலும், ரங்கநாதன் கடையிலும் இரண்டரை ரூபாவிற்கு வாங்கிய இரப்பர்பந்துகளுடன் மைதானத்தின் எல்லா மூலைகளிலுமிருந்து நாங்கள் களம் இறங்குவதே தனி அழகு!!.
[caption id="attachment_651" align="aligncenter" width="1000"] எங்கள் அதிபர் - கனக்ஸ் - சில ஞாபகங்கள்-01[/caption]
மைதானத்தில் ஓரு பத்துப்பன்னிரண்டு பந்துகள் உருண்டு விளையாடும். ஒவ்வொரு கோல்போஸ்ட்டிற்கும் பல கோலிகள் இருப்பார்கள். யாராவது ஒரு கோலி எந்தப்பந்து தனது பந்தென தெரியாமல் மாறிப்பிடித்துவிட ஒரே கலாட்டாவாகப் போய்விடும். எனினும் அடுத்தநிமிடமே விளையாட்டு ருசியில் எல்லாம் மறந்து மைதானம் திரும்பவும் களைகட்டத் தொடங்கிவிடும். மேலும் மைதானம் முழுக்க, முழுக்க ஒரே குதூகலம் கலந்த கூச்சலால் நிறைந்திருக்கும்.
மதியஉணவு நேரம் முடிந்ததற்கான பெல் அடித்ததுகூட தெரியாமல் (தெரிந்தாலும் தெரியாதது மாதிரி) களைக்கக் களைக்க விளையாடிக் கொண்டிருப்போம். வகுப்பிற்கு ஆசிரியர் போவதைப் பார்த்த பின்னர்தான் ஏலாக்குறையாக வகுப்புகளிற்குப் போவோம். பின்னர் கடைசிபெல் அடிக்குமட்டும் எந்தப்பாடமும் காதில் நுழையாது களைப்பாறத்தான் சரியாகவிருக்கும். தேவாரம் படித்துமுடிந்ததுதான் தாமதம், கேத்திரகணிதத்தில் படித்த c < a + b தேற்றத்தை நடைமுறையில் நிறுவும் வண்ணம் மைதானத்தின் குறுக்கே விழுந்து கடந்து வீட்டுக்கு ஓடிப்போய் விடுவதிலேயே குறியாகவிருப்போம். ஏறக்குறைய பள்ளிக்கூடம் போவதே விளையாடத்தான் என்றிருந்தோம்.
என்றும்போல அன்றைக்கும் மதியஉணவு நேரம் எல்லா மூலைகளிருந்தும் குதூகலமாக நாங்கள் வந்து விளையாட ஆரம்பிக்கும் முன்னரே ஒரு ஆசிரியர் வந்து இனிமேல் மைதானத்தில் விளையாடமுடியாது எல்லோரும் வகுப்பறைகளிற்கு போகலாம். என்று உத்தரவிட்டார்.
ஏன்? இது எங்கள் கேள்வி.
புதிய அதிபர் கல்லூரியைப் பொறுப்பேற்றிருக்கின்றார். அவருடைய உத்தரவு இது. என்று சொல்லிவிட்டு எங்களைக் கலைப்பதிலேயே குறியானார். சிலர் வகுப்பறைகளிற்கு போக புதியஅதிபரைப் பார்க்கும் ஆர்வத்தில் அதிபரின் அறைக்குச் சென்றோம். அங்கு அதிபர் இருக்கவில்லை. எனவே பக்கத்திலுள்ள நூலகத்திற்கு சென்று பத்திரிகைகளை புரட்டினோம். அன்றைய ஈழநாடு பத்திரிகையில் முதற்பக்கத்தில் புத்தூர்க் கல்லூரி மாணவர்கள் அதிபர் இடமாற்றத்தை ஆட்சேபித்து வகுப்புக்களைப் பகிஷ்கரித்தனர் என்பது செய்தியாக வந்திருந்தது. அவரேதான் எங்கள் புதிய அதிபர் என்ற செய்தியும் கூடவேயிருந்தது. இப்படித்தான் புதிய அதிபர் வந்த புதினம் எங்களை வந்தடைந்தது.
அந்தநாட்களில் அடிக்கடி அதிபர்கள் மாறுவது எங்கள் கல்லூரியின் வழக்கமாக இருந்தது. எனவே புத்தூர் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த புதுஅதிபரும் திரும்பிவிடுவாரோ எனப்பயந்தோம். ஆனால் விரும்பி வந்தவர் திரும்பப் போவாரா? என்ன!!
அன்று முழுக்க கடைசிபெல் அடிக்குமட்டும் எங்கள் பேச்சும், சிந்தனையும், புதிய அதிபரைப்பற்றியே இருந்தது. வழமைபோல தேவாரம் படித்து முடிந்தவுடன் மைதானத்தின் குறுக்கே விழுந்து நாங்கள் ஓடிப்போக ஆயத்தமானபோது மைதானத்தின் நடுவே White & White ஆக நின்றுகொண்டிருந்த அந்த நெடியமனிதர் மைதானத்தின் குறுக்கே யாரும் வராமல் ஓரமாக ஒழுங்காகப் போகுமாறு வழிகாட்டியவாறு, கேத்திரகணித தேற்றத்தின் மறுவளமும் a + b > c உண்மை என்பதை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்..
அன்றிலிருந்து எங்களிற்கு வழிகாட்டிய, நாங்கள் செல்லமாக கனக்ஸ் என்றழைக்கும், அந்த நெடிய மனிதர், திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எங்கள் கல்லூரியில் நிகழ்த்திய பௌதிக, இரசாயன மாற்றங்கள் பலவற்றில், என் ஞாபகத்திலிருக்கும் ஒன்றிரண்டை மாத்திரம் ஒரு சிறுதொடராக இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
அன்புடன்.
சாதாரணன்.
(தொடரின் மிகுதி விரைவில்)
Image Credit : www.mahajana.org
பிற்குறிப்பு: இக்கட்டுரை 2002ஆம் ஆண்டு எங்கள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்தபோது மெல்பேண் பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட விழாவில் நான் எழுதி வாசித்த கட்டுரை. இது திருத்தி விரிவாக்கப்பட்டுள்ளதின் முதற்பகுதி.
No comments:
Post a Comment